ஐக்கிய நாடுகள்: ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, ‛‛ மோசமான சாதனைகளை கொண்ட நாடு, மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது. அதற்கு பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் கிடையாது. இந்தியா பற்றி கருத்து தெரிவிப்பது விபரீதமானது” எனத் தெரிவித்து உள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலின் வழக்கமான 55வது கூட்டம் நடந்தது. இதில், பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது. இதற்கு இந்தியாவின் நிரந்தர தூதர் அனுபமா சிங், பதிலளிக்கும் உரிமையை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு பதில் கொடுத்தார்.
அப்போது அனுபமா சிங் கூறியதாவது: இந்தியாவைப் பற்றிய பாகிஸ்தானின் பேச்சை பொறுத்தவரை, இந்த சபையானது மீண்டும் ஒரு முறை தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மனித உரிமை வரலாற்றில் பாகிஸ்தான் மோசமான சாதனைகளை படைத்து உள்ளது. 2023 ஆக., ஜரன்வாலா நகரில் 19 தேவாலயங்கள் இடிக்கப்பட்டன. 89 கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. சொந்த நாட்டு சிறுபான்மையின மக்களை துன்புறுத்தலை சட்டப்பூர்வமாக்கியதுடன், மோசமான சாதனையை படைத்த நாடு பாகிஸ்தான்.
பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக நீதியை அடைவதில் பெரும் முன்னேற்றம் அடைந்து வரும் இந்தியாவை பற்றி பாகிஸ்தான் கருத்து தெரிவிப்பது வெறும் கேலிக்கூத்தானது மட்டும் அல்ல. விபரீதமானது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement