Palakkad, Manappullikkau Bhagavathy Amman temple festival festival | பாலக்காடு, மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு, மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.

கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள பிரசித்தி பெற்ற மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவிலில், மாசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

கணபதி ஹோமத்துடன் நேற்று திருவிழா துவங்கியது. தொடர்ந்து, நாதஸ்வர கச்சேரி, பரிவார பூஜை, கிழக்கூட்டு அனியன் மாரார் தலைமையில் ‘பஞ்சாரிமேளம்’ நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட செண்டை மேளம் இசைத்தனர்.

அப்போது, ஏழு யானைகள் அணிவகுப்புடன் நடந்த ‘காழ்ச்சீவேலி’ நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பின், மேற்கு யாக்கரை ஸ்ரீமூலஸ்தானத்தில் இருந்து அம்மனின் வாளும், பீடமும் எழுந்தருளும் வைபவம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பூர்ண சந்தாபிஷேகம் நடைபெற்றது.

மாலையில், மணப்புள்ளி பகவதி அம்மன் கோவிலில் இருந்து, 15 யானைகளின் அணிவகுப்புடன் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து, திருவிழாவின் சிறப்பு அம்சமாக கோட்டை மைதான வாசலில், கிழக்கு நோக்கியவாறு பரய்க்காடு தங்கப்பன் மாரார் தலைமையில், பஞ்சவாத்தியம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்த, 15 யானைகள் அணிவகுத்து, பிரம்மாண்ட முத்துமணி வண்ணக் குடை மாற்றம் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

மேற்கு யாக்கரை, கொப்பம், வடக்கந்தரை, முட்டிக்குளங்கரை, கள்ளிக்காடு ஆகிய பகுதிகளில் இருந்து வந்த, 15 யானைகளின் அணிவகுப்பு கோட்டை மைதானத்தில் நடந்தது. இரவு வானவேடிக்கையுடன் விழா நிறைவடைந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.