தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்களும், சில இயக்கங்களும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன. 2018-ம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இந்திய அளவில் பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு அரசு சீல் வைத்தது.
அதை ரத்து செய்து, மீண்டும் ஆலையைத் திறக்கக் கோரி, வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை உறுதி செய்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்தது வேதாந்தா நிறுவனம். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி சந்திரசூட், “தொழிற்சாலையை மூடுவது சந்தேகத்திற்கு இடமின்றி விருப்பமான விஷயமல்ல. இருப்பினும், மீண்டும் மீண்டும் நடந்த விதிமீறல்களின் தீவிரத்தன்மையால் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் அனைத்தும், அதிகாரிகளாலோ அல்லது உயர் நீதிமன்றத்தாலோ கவனக்குறைவாக கையாளப்பட்டதாகத் தெரியவில்லை. சட்டபூர்வ அதிகாரிகள் பல ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளை நீதிமன்றத்தில் சமர்பித்திருக்கின்றனர். அதன் அடிப்படையில்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பும் வழங்கியிருக்கிறது.
உயர் நீதிமன்றத்தின் அணுகுமுறையில் கடுமையான தவறு எதுவும் நிரூபிக்கப்படவில்லை. எனவே, அதில் உச்ச நீதிமன்றம் தலையிடவேண்டிய அவசியமில்லை. மேலும், தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவை தவறு எனவும் கூற முடியாது. அதனால், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாகத் திறக்க அனுமதிக்க முடியாது. தமிழ்நாடு அரசு, ஆலையை மூடி சீல் வைத்தது சரியானதுதான்.
அந்தப் பகுதியில் வாழும் மக்களின் ஆரோக்கியம், நலன், சுற்றுச்சூலை பாதுகாப்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று. எனவே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது” எனத் தீர்ப்பளித்து, வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறார்.
இந்தத் தீர்ப்பை வரவேற்ற தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது! எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.