செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளராக இருந்தவர், ஆராவமுதன் (56). இவர் வண்டலூர் அருகே மேம்பாலத்தின் கீழ் நேற்றிரவு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஒரு கும்பல், காரின்மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி திடீரென தாக்குதல் நடத்தியது. இதில் காரின் கண்ணாடிகள் சேதமடைந்தன. அதோடு நாட்டு வெடிகுண்டுகள் வீசியதில் ஆராவமுதனும் காயமடைந்தார். இதையடுத்து அந்தக் கும்பல், காருக்குள் இருந்த ஆராவமுதனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி சாய்த்தது. அப்போது ஆராவமுதனின் இடது கை துண்டானது. முகத்திலும் சரமாரியாக வெட்டுகள் விழுந்தன. பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
நடுரோட்டில் தி.மு.க பிரமுகர் ஆராவமுதன் வெட்டப்பட்ட சம்பவம், காட்டுத்தீபோல பரவியது. உடனடியாகச் சம்பவ இடத்துக்கு தி.மு.க நிர்வாகிகளும் பொதுமக்களும் திரண்டனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஆராவமுதனை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து வண்டலூர் வேம்புலி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தி.மு.க கிளைச் செயலாளர் சத்யநாராயணன் என்பவர் வண்டலூர் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். தி.மு.க பிரமுகர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தையடுத்து அமைச்சர் தா.மோ அன்பரசன், போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் காவல்துறையினர் அங்கு வந்து விசாரித்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்ததோடு, கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீஸார், சிசிடிவி மற்றும் செல்போன் சிக்னல் மூலம் கொலையாளிகளைத் தேடிவந்தனர். அதோடு, கொலைசெய்யப்பட்ட ஆராவமுதனின் எதிரிகள் குறித்தும் விசாரித்து வந்தனர். இந்தச் சூழலில் இந்தக் கொலை வழக்கு தொடர்பாக சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் 5 பேர் சரண் அடைந்தனர். இந்தத் தகவலைக் கேள்விப்பட்டதும் ஓட்டேரி போலீஸார் அங்கு சென்றிருக்கிறார்கள். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால்தான், இந்தக் கொலைக்கான முழு விவரம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து ஓட்டேரி போலீஸார் கூறுகையில், “கொலைசெய்யப்பட்ட தி.மு.க பிரமுகர் ஆராவமுதனைப் பின்தொடர்ந்து வந்த கும்பல், பக்காவாக ஸ்கெட்ச் போட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறது. சரணடைந்தவர்களிடம் விசாரித்தால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும். இதற்கிடையில் எங்களின் சந்தேக வளையத்தில் பிரபல ரௌடி ஒருவரும் உள்ளார்” என்றனர்.
தி.மு.க பிரமுகர் ஆராவமுதன் கொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரின் ஆதரவாளர்களிடம் பேசினோம். “இவர், நீண்ட காலமாக கட்சியில் இருந்து வருகிறார். மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்தார். நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசித்து வந்தார். தற்போதுகூட பேருந்து நிறுத்தம் திறப்பு விழா, முதல்வரின் பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகளைப் பார்க்கச் சென்ற இடத்தில்தான் இப்படியொரு சம்பவம் நடந்துவிட்டது. அமைச்சர் தா.மோ.அன்பரசுவின் தீவிர ஆதரவாளராக இருந்தார்” என்றனர்.