கொல்கத்தா: சந்தேஷ்காலி விவகாரத்தால் நாடே கொந்தளிப்பு அடைந்துள்ளது என்று மேற்கு வங்க திரிணமூல் காங்கிரஸ் அரசை சாடிய பிரதமர் மோடி, “இந்த விவகாரம் குறித்து சமூக சீர்திருத்தவாதி ராஜராம் மோகன்ராய் இப்போது கேள்விப்பட்டால் அவரது ஆன்மா கண்ணீர் விடும்” என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஹுக்ளி மாவட்டத்தின் ஆரம்பாக் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசினார். அப்போது அவர் கூறியது: “சந்தேஷ்காலியில் உள்ள சகோதரிகளுக்கு என்ன நடந்தது என்று இந்த நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த நாடும் கொந்தளிப்பில் உள்ளது. சந்தேஷ்காலியில் என்ன நடந்தது என்று சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன்ராய் அறிய நேர்ந்தால் அவரின் ஆன்மா கண்ணீர் விடும்.
திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி எல்லை மீறிவிட்டார். இங்குள்ள பெண்களின் மரியாதை, கண்ணியத்துக்காக மாநில பாஜக தலைவர்கள் போராடியுள்ளனர். முடிவாக நேற்று போலீஸ் அவர் (ஷேக் ஷாஜகான்) கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.
இண்டியா கூட்டணியில் உள்ள எல்லா உயர்மட்டத் தலைவர்களும் சந்தேஷ்காலி சம்பவம் தொடர்பாக வாய்மூடி மவுனமாக உள்ளனர். இண்டியா கூட்டணித் தலைவர்கள் இந்த விவகாரத்தில் மகாத்மா காந்தியின் குரங்குகளைப் போல கண், வாய், செவி மூடி இருக்கிறார்கள்” என்று பிரதமர் மோடி விமர்சித்தார்.
மேலும், “சந்தேஷ்காலி விவகாரம் தொடர்பாக மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை” என்று குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, “அதிகாரிகளுக்கு பாஜக கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்புக்காக குற்றச்சாட்டினைச் சந்தித்து வரும் ஷேக் ஷாஜகான் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று பிரதமர் மோடி கூறினார்.
முன்னதாக, மேற்கு வங்கத்தின் ஹுப்ளி மாவட்டத்தின் ஆரம்பாகில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டங்கள் ரயில்வே, துறைமுகங்கள், எண்ணெய் குழாய்கள், எரிவாயு விநியோகம், கழிவுநீர் சுத்திகரிப்பு போன்றவற்றை உள்ளடக்கியது ஆகும்.
கடந்த ஜனவரி 5-ம் தேதி ரேஷன் பொருள்கள் ஊழல் வழக்கில் சோதனைக்கு வந்த அமலாக்கத் துறை அதிகாரிகளைத் தாக்கியது தொடர்பாக 50 நாட்களுக்கு மேல் தலை மறைவாக இருந்த திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகானை வியாழக்கிழமை அதிகாலையில் மேற்கு வங்க போலீஸார் கைது செய்தனர்.
சந்தேஷ்காலி பின்புலம்: மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டம் சந்தேஷ்காலி தீவுப் பகுதியைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான். சந்தேஷ்காலி சட்டப்பேரவை தொகுதி ஒருங்கிணைப்பாளராக இருந்தார். ரேஷன் பொருட்கள் கடத்தல், நில அபகரிப்பு, பாலியல் வன்கொடுமை என பல்வேறு குற்றச் செயல்களில் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்களும் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்துள்ளனர். சந்தேஷ்காலி தீவுப் பகுதியில் 10 கி.மீ தூரத்துக்கு உள்ள பழங்குடியினரின் நிலங்களை ஷாஜகான் ஆக்கிரமித்துள்ளார்.
பழங்குடியின பெண்களை கட்சி அலுவலகத்துக்கு இரவில் வரச் சொல்லி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவருக்கு எதிராக போலீஸில் புகார் கொடுத்தால், ஷாஜகான் மீது உள்ளூர் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடாதவர்களை சித்ரவதை செய்துள்ளனர். ஹாஜகான் அராஜகத்தை பொறுத்துக் கொள்ள முடியாத சந்தேஷ்காலி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து சந்தேஷ்காலியில் ஷாஜகானுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 5-ம் தேதி சோதனை நடத்தியது. அப்போது அமலாக்கத் துறை அதிகாரிகளை ஷாஜகான் ஆதரவாளர்கள் சுற்றிவளைத்து தாக்கினர். அதன்பின் ஷாஜகான் தலைமறைவாகிவிட்டார்.
ஷாஜகான் கைது செய்யப்படாததற்கு, கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேற்கு வங்க அரசை கண்டித்தது. இதையடுத்து ஒரு வாரத்தில் ஷாஜகானை கைது செய்வதாக நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு உறுதி அளித்தது. ஷாஜகானை கைது செய்வதற்கு மாநிலஆளுநர் 72 மணி நேரம் கெடுவிதித்தார். இதையடுத்து 24 மணி நேரத்துக்குள் ஷாஜகானை மேற்கு வங்க போலீஸார் கைது செய்தனர். சந்தேஷ்காலி தீவில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள சுந்தரவனப் பகுதியில் உள்ள பாமன்புகுர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்த ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீஸார் கைது செய்ததாக தெற்கு வங்காள ஏடிஜிபி சுப்ரதிம் சர்கார் தெரிவித்தார். 55 நாட்கள் தலைமறைவுக்குப் பின் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷாஜகான் மீது பல பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். செல்போன் டவர் உதவி மூலம் ஷாஜகானின் இருப்பிடத்தை கண்டுபிடித்ததாக போலீஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டபின்பு, அவரை பஷீர்ஹட் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தி 10 நாள் போலீஸ் காவலில் எடுத்தனர்.
6 ஆண்டுக்கு சஸ்பெண்ட்: ஷாஜகான் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓபிரைன் அறிவித்துள்ளார். ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து சந்தேஷ்காலி மக்கள் நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிபிஐயிடம் ஒப்படைக்க கோரிக்கை: இந்நிலையில், ஷாஜகான் மீதான வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்ரீவஸ்தவா நேற்று மனு தாக்கல் செய்தார். அதை திங்கள்கிழமை விசாரிப்பதாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் கூறியது.