புதுடெல்லி,
புரோ ஆக்கி லீக் தொடரில் சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணியில் சுனெலிதா டோப்போ அறிமுகமானார். 2022 -ம் ஆண்டு குஜராத்தில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் ஜூனியர் இந்திய மகளிர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 2023-ல் நடைபெற்ற பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பையில் இந்திய அணி பட்டம் வென்றது. அதில் சிறப்பாக விளையாடிய டோப்போ சீனியர் அணிக்கு அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்திய அணிக்காக அவரது முதல் ஆட்டம் குறித்து அவர் கூறுகையில், “ஆரம்பத்தில், புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடைபெற்ற புரோ ஆக்கி லீக் தொடரில் பங்கேற்பதை என்னால் நம்ப முடியவில்லை. சீனாவுக்கு எதிராக எனது முதல் ஆட்டத்தில் விளையாடுவேன் என்று தெரிந்ததும், பதற்றமடைந்தேன். ஆனால், ஆட்டம் தொடங்கியவுடன் எனது சீனியர்கள் கூறிய அறிவுரைகளில் கவனம் செலுத்தினேன். அது என்னை அமைதிப்படுத்த உதவியது.
போட்டிக்கு முன் நான் லால்ரெம்சியாமி, நவ்நீத் கவுர் மற்றும் நிக்கி பிரதான் ஆகியோரிடம் பேசினேன். அது என்னை அமைதிப்படுத்த உதவியது. வந்தனா கட்டாரியாவும் என்னை சமாதானப்படுத்தினார். சீனியர்களின் அறிவுரைகள் களத்தில் அதிகமாக யோசிக்கவும், சுதந்திரமாக விளையாடவும், என்னை அமைதிப்படுத்தவும், அணிக்காக எனது சிறந்ததை வழங்கவும் உதவியது” என்று கூறினார்.