நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, கூட்டணி இறுதி செய்வது என பரபரக்கிறது அண்ணா அறிவாலயம். தி.மு.க கூட்டணியில் முதற்கட்டமாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதியும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஆனால் காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் இடங்களைப் பகிர்ந்து கொள்வதில் இழுபறி நிலவி வருகிறது.
இருப்பினும், மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் ஒப்பிடுகையில், புதுவரவான ம.நீ.ம-வுடன், தி.மு.க ஒருமுறைகூட நேரடி பேச்சுவார்த்தை நடத்தாததும், தொகுதிப் பங்கீடு குறித்து ம.நீ.ம அதிகாரபூர்வமாக எதுவுமே சொல்லாத நிலையில் இருப்பதும், ம.நீ.ம, தி.மு.க கூட்டணிக்குள்தான் இருக்கிறதா… ம.நீ.ம-வுக்கு சீட் ஒதுக்குவார்களா? எனப் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், “மக்கள் நீதி மய்யம் மறைமுகப் பேச்சுவார்த்தையை பல வாரங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஆரம்பத்தில் `இரண்டு தொகுதிகள் வேண்டும்’ என்பது ம.நீ.ம-வின் கோரிக்கை. ஆனால், `ஒரு தொகுதிதான்’ என்பது தி.மு.க-வின் ரிப்ளையாக இருந்தது. தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மக்கள் நீதி மய்யத்துக்கு, ஒரு ராஜ்ய சபா சீட்டும், தேர்தலில் போட்டியிட்ட கோவை தொகுதியும் ஒதுக்க முன்வந்துள்ளது. ஆனால் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என கறாராகச் சொல்லிவிட்டது தி.மு.க.
தி.மு.க-வின் இந்த 1+1 ஆஃபர் மக்கள் நீதி மய்யத்துக்குத் துளியும் மகிழ்ச்சியைத் தரவில்லை. ஒரு கட்சியின் தலைவர் எப்படி உதயசூரியன் சின்னத்தில் போட்டிய முடியும் என சோர்வடைந்துள்ளனர். அப்படி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் கிளம்பும் விமர்சனத்துக்கு யார் பதில் சொல்வது? அதற்கு பேசாமல் ராஜ்ய சபா சீட்டை மட்டும் பெற்றுக் கொள்ளலாம், என்ற குரலும் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழுவில் எழுந்துள்ளது. மேலும், இழுபறி தொடரும் பட்சத்தில், தி.மு.க-வைப் பொறுத்தவரையில், `ஒரு சீட் வேண்டுமென்றால் ஓகே… இல்லையென்றால் அடுத்த முறை பார்த்துக்கொள்வோம்’ என்கிற மனநிலையிலும் இருக்கிறார்கள்” என்றனர்.
நம்மிடம் பேசிய தலைமைக்கு நெருக்கமான மக்கள் நீதி மய்யத்தினரோ, “தி.மு.க-வுடன் ம.நீ.ம கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான். ஆனால் அதிகாரபூர்வமாக எந்த முடிவும் இதுவரை எட்டப்பட வில்லை. இரு தொகுதிகளில் டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிடவதற்கான கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்தோம். மேலும், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளும் நடக்கவிருக்கிறது. அதன் பிறகே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும். தி.மு.க சின்னத்திலேயே எங்கள் தலைவர் போட்டியிடுவதை கட்சியினர் ஏற்கமாட்டார்கள். எனவே டார்ச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான கோரிக்கையை வலுவாக முன்வைப்போம். தி.மு.க உறுதியாக அதனை பரிசீலிக்கும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY