தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க, ம.தி.மு.க, முஸ்லிம் லீக், கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. வரும் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிகளை பங்கீட்டு கொள்வதற்காக குழுவை தி.மு.க அமைத்திருக்கிறது. இதில் தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு கடந்த வாரம் தலா ஒரு இடம் ஒதுக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த வரிசையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் இடங்களை பகிர்ந்து கொள்வதில் சிக்கல் நிலவி வருகிறது. இந்த சூழலில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, “கூட்டணி குறித்து விமர்சனங்கள் கூடாது” என அறிவுறுத்தியிருக்கிறார்.

அது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை, கூட்டணித் தலைமையுடன் தொடர்ந்து நடந்துகொண்டிகிறது. இந்த நிலையில், கழகத் தோழர்கள் சமூக வலைதளங்களில் தேர்தல் கூட்டணி குறித்துப் பதிவிடுவதும், விமர்சனங்களை முன்வைப்பதும் எனக்கு மன வேதனை அளிக்கிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா காட்டிய லட்சியப் பாதையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்க லட்சிய வெற்றிக்காகவும், தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளைக் காக்கவும், தமிழ்நாட்டின் நலன்களுக்காகக் குரல் கொடுத்தும் தன்னலம் கருதாது பாடுபட்டு வரும் பேரியக்கம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ம.தி.மு.க அவைத் தலைவர் அர்ஜுன ராஜ், “நாங்கள் ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை கேட்டோம். தலைமையிடம் பேசி முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அடுத்த கட்டமாக பேச உள்ளோம். நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம். எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவோம். தி.மு.க நிர்பந்தித்தாலும் ஒப்புக்கொள்ள மாட்டோம்” என்றார்.

இதையடுத்து தி.மு.க, ம.தி.மு.க இடையேயான தொகுதிப் பங்கீட்டில் என்னதான் நடக்கிறது… வைகோ திடீரென அறிக்கை வெளியிட காரணம் என்ன என்ற கேள்வியுடன் தாயகத்துக்கு நெருக்கமான சீனியர்களிடம் பேசினோம், “முதலில் தி.மு.க கூட்டணியில் 6 தொகுதிகளின் பட்டியலை கொடுத்தோம். அதில் இரண்டு இடங்களை வழங்கும்படி கேட்டோம். அவ்வாறு வழங்கும் பட்சத்தில் ஓர் இடத்தில் பம்பரம் சின்னத்தில் துரை வைகோவை களம் இறக்க திட்டமிட்டிருந்தோம். தி.மு.க தரப்பு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
அதில் அவைத்தலைவர் அர்ஜுனராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன், அரசியல் ஆய்வு மைய செயலாளர் அந்திரிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, ‘கடந்த தேர்தலைப்போல ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை இடங்களை இந்த முறையும் ம.தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டும். மேலும் பம்பரம் சின்னத்தின்தான் போட்டியிடுவோம்’ எனத் தெரிவித்தோம். அதற்கு பதிலளித்த தி.மு.க-வினர், ‘ஒரு மக்களவை தொகுதி மட்டுமே ம.தி.மு.க-வுக்குத் தரப்படும்’ என்றனர். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

குறிப்பாக இந்த முறை திருச்சி அல்லது விருதுநகரில் போட்டியிட விரும்பும் துரை வைகோவுக்கு, ஏக வருத்தம். இதையடுத்துதான் தி.மு.க-வின் செயல்பாடுகளை ம.தி.மு.க-வினர் விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர். இது தலைவரின் கவனத்துக்குச் சென்றது. இனியும் இதை வளரவிடக் கூடாது என்பதற்காக, அவரே நேரடியாக களத்துக்கு வந்துவிட்டார். முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவரை நேரில் சந்திக்க திட்டமிட்டார். அதன்படி துரை வையாபுரி, அர்ஜுன ராஜ், மல்லை சத்யா ஆகியோருடன் சென்று வாழ்த்து தெரிவித்தார். கூடவே ‘ம.தி.மு.க-வுக்கு ஒரு மக்களவை, மாநிலங்களவை சீட் ஒதுக்க வேண்டும்’ என தலைவர் பேசிவிட்டு வந்துவிட்டார். தலைவரே நேரடியாக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருப்பதால், விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறோம்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY