தமிழகத்தில் கடந்த செவ்வாய், புதன் ஆகிய 2 நாட்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, திமுக மீது கடும் தாக்குதல் நடத்திச் சென்றுள்ளார். திமுக இனி இருக்காது என்றும், தமிழகத்தில் இருந்து திமுக முற்றாக அகற்றப்படும் எனவும், இனி தேடினால் கூட திமுகவை காண முடியாது என்றெல்லாம் திமுகவுக்கு எதிராக மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார் பிரதமர்.
திமுகவை கடுமையாக விமர்சனம் செய்த மோடி, அதேநேரத்தில் தமிழ்நாட்டின் இன்னொரு பிரதான கட்சியான அதிமுக குறித்து எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை. மாறாக அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். பற்றி வானளாவ புகழ்ந்து சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆருக்குப் பிறகு வந்த ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆர். வழியில் பொது நலனை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியைத் தந்தார் என மோடி பாராட்டியுள்ளார்.
முதல் நாள் பல்லடத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலிதாவை புகழ்ந்தும், மறுநாள் நெல்லையில் திமுகவை இனி இல்லாமல் செய்வேன் என்றும் பிரதமர் பேசியதுதான் இப்போது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான பேசு பொருளாக உள்ளது. “நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா கூட்டணி அமைய திமுக முக்கிய பங்காற்றியதுதான் எங்கள் கட்சி மீதான மோடியின் கோபத்துக்கு காரணம்” என்று திமுக தலைவர்கள் கூறுகின்றனர்.
மேலும், “2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, ஜெயலலிதா ஆட்சியைப் பற்றி, ’தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. இந்த லஞ்சத்தினால் தமிழ்நாடே முற்றிலும் பாதித்துப் போய் இருக்கிறது’ என ஓசூரில் நின்று கடுமையாக விமர்சித்தார் மோடி. ஆனால் இன்று ஜெயலலிதாவை வைத்து, தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க நினைக்கிறார்.
அவரிடம் சொந்தச் சரக்கு ஏதுமில்லை என்பதற்கு இதுவே சான்று” என்று பிரதமரின் பேச்சு குறித்து திமுக பொருளாளர் டி.ஆர். பாலு விமர்சனம் செய்துள்ளார். திமுகவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்வதன் மூலம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது அபிமானம் கொண்டவர்களின் வாக்குகளை கவர்வதே பிரதமர் உரையின் மிக முக்கிய நோக்கம் என்று திமுகவினர் மட்டுமல்ல; அதிமுகவில் உள்ளவர்களாலும் பேசப்படுகிறது.
இது குறித்து பெயர் குறிப்பிட விரும் பாத அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: எம்.ஜி.ஆர். மீது பற்று கொண்டவர்களால் மட்டும் அதிமுக வளர்ந்து விடவில்லை. அதைவிடவும் திமுக மீதும், அதன் தலைவர் கருணாநிதி மீதும் வெறுப்பு கொண்டவர்கள்தான் அதிமுகவின் அதிதீவிர ஆதரவாளார்களாக இருந்தனர்.
இதனை சரியாக புரிந்துகொண்டதல்தான் எம்.ஜி.ஆரை விடவும் கடுமையான சொற்களால் திமுகவையும், கருணாநிதியையும் ஜெயலலிதா சாடினார். அதன் காரணமாகவே எம்.ஜி.ஆர். காலத்தை விடவும் ஜெயலலிதா காலத்தில் வலிமையான இயக்கமாக அதிமுக வளர்ந்தது. பாஜக ஆதரவாளர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர் சாதி இந்துக்கள் கூட, தேர்தல் நேரங்களில் பாஜகவுக்கு வாக்களிப்பதால் திமுகபலன் பெற்று விடக்கூடாது என்பதற்காக ஜெயலலிதாவைதான் ஆதரித்தார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் இன்று அதிமுகவை விடவும் பாஜகதான் திமுகவை கடுமையாக விமர்சிக்கிறது. குறிப்பாக தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு திமுக மீதான தாக்குதலை கடுமையாக்கினார். அதனால் இங்கு திமுகவுக்கு பிரதான எதிர்க்கட்சி அதிமுகவா அல்லது பாஜகவா என்று பேசும் நிலை வந்துவிட்டது. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். காலம் முதல் மிக நீண்ட காலமாக ஒரு பகுதி மக்களிடம் நிலவி வரும் திமுக எதிர்ப்பு உணர்வை இன்னும் கூர்மைப்படுத்தி, அவற்றை தங்களுக்கான ஓட்டாக அறுவடை செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.
அதற்காகத்தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய எங்கள் தலைவர்களை பிரதமர் புகழ்ந்து பேசுகிறார். இது எங்கள் கட்சி தலைமைக்கும் நன்றாகவே தெரியும். இதில் நாங்கள் எச்சரிக்கையாகவே இருக்கிறோம். திமுகவுக்கு பிரதான அரசியல் எதிரி அதிமுகதான். ஆகவே, பாஜகவின் திட்டம் நிறைவேறாது. இவ்வாறு அவர் கூறினார். கடந்த தேர்தலைப் போலவே, இந்த தேர்தலிலும் திமுக அணியே தமிழ்நாட்டில் வெற்றி பெறும் என்பதே பெரும்பான்மையோரின் கணிப்பாக உள்ளது.
பாஜகவுக்கும் இது நன்றாகவே தெரியும். வெற்றி பெறுவது அவர்களது நோக்கம் அல்ல. குறைந்தபட்சம் 15 சதவீதம் வாக்குகளை நெருங்க வேண்டும் என்பதே அண்ணாமலையின் நோக்கம் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். பாஜகவுக்கு தனியாக 15 சதவீதம் வாக்குகள் கிடைத்துவிட்டால், திராவிட கட்சிகளில் ஒன்று வீழ்ந்து, அக்கட்சியின் பெரும்பாலான ஆதரவாளர்கள் தங்கள் பக்கம் வந்து விடுவார்கள்.
அதனால் அடுத்து வரும் தேர்தல்களில் மிக விரைவாக வாக்கு சதவீதம் உயரும். அதற்கு இந்த தேர்தலை விட்டால் வேறு நல்ல வாய்ப்பு கிடைக்காது என்று அண்ணாமலை நம்புகிறாராம். அதற்காகத்தான் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்பதில் அவர் உறுதியாக இருந்தாராம்.
இந்த தேர்தலில் வாக்குசதவீதத்தை உயர்த்துவதற்காக பாஜக மட்டுமின்றி, கூட்டணிகட்சி வேட்பாளர்களையும் சேர்த்து 30 தொகுதிகளுக்கு மேல்தாமரை சின்னத்தில் களம் காண வேண்டும் என்பதே அண்ணாமலையின் திட்டம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலையின் இந்த திட்டங்கள் வெற்றி பெறும் என்று பாஜக தலைமையும் நம்புகிறது என்கிறார்கள்.
ஆகவே, தமது அடுத்தடுத்த தமிழக பயணங்களில், திமுக மீது பிரதமர் இன்னும் கடும்தாக்குதலைத் தொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். இந்த தாக்குதல்களில் வீழப் போவதுயார் என்பது, 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுகளின் போது திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் பெறும் வாக்கு சதவீத்தில்தான் தெரியவரும்.