சென்னை: திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கக் கோரி சட்டப்பேரவைச் செயலாளரைச் சந்தித்து அதிமுக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. அதிமுக சார்பில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் தளவாய் சுந்தரம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இந்தக் கடிதத்தைக் கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் கூறியது: “இன்று பேரவைத் தலைவருக்கு ஒரு கடிதம் கொடுக்க வந்தோம். ஆனால், பேரவைத் தலைவர் இல்லாத காரணத்தால், பேரவைச் செயலாலளரிடம் அந்தக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், சொத்துக் குவிப்பு வழக்கில், கடந்த 19.12.2023 அன்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்றும், 22.12.2023 அன்று அவருக்கு மூன்றாண்டு தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துளது.
ஆனால், இன்றுவரை பொன்முடியை தகுதி நீக்கம் செய்திருக்கிறார்களே தவிர, அவரது தொகுதி காலியாக இருக்கிறது என்று அறிவிக்கவில்லை. அதை அறிவிக்க வேண்டியது சபாநாயகரின் கடமை. எனவே, அதை உடனடியாக நடவடிக்கை எடுத்து அறிவிக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்திருக்கிறோம். சட்டப்பேரவைச் செயலாளர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்” என்றார்.
முன்னதாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, எம்.பி., எம்எல்ஏ.க்கள் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டாலே அவர்கள் தகுதி இழப்பு செய்யப்படுவார்கள். அந்த வகையில், உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், அவருக்கு3 ஆண்டுகள் சிறை, ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை பொன்முடி இழந்தார்.