சென்னை: “பாஜகவை பொறுத்தவரை எல்லாம் மக்கள் சேவைதான். மேலிடம் இதை செய் என்று கூறினால், அதை நான் செய்வேன். இதில் என்னுடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு என்று எதுவும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை 39 தொகுதிகளிலும் சமமாகதான் வேலை செய்திருக்கிறேன்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடப் போவதாக தகவல் வெளியாவது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், “பாஜக இன்று வரை எனக்கு ஒரு பொறுப்பு கொடுத்திருக்கிறது. அதை செய்து கொண்டிருக்கிறேன். இன்று வரை என்னுடைய பொறுப்பு, அனைத்து மாவட்டங்களுக்கும் செல்வது.
பாஜகவை பொறுத்தவரை எல்லாம் மக்கள் சேவைதான். மேலிடம் இதை செய் என்று கூறினால், அதை நான் செய்வேன். இதில் என்னுடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு என்று எதுவும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை 39 தொகுதிகளிலும் சமமாகதான் வேலை செய்திருக்கிறேன்.
கட்சி போட்டியிடு என்று கூறினால் போட்டிடுவேன், கட்சி தேர்தல் பணி செய் என்று கூறினால் செய்யப் போகிறேன், பிரச்சாரம் செய் என்று கூறினால் செய்வேன். நான் கட்சியிடம் எதையுமே கேட்கவில்லை. அனைத்தையும் கட்சியே முடிவு செய்யும்.
என்னை அடுத்த 60 நாட்களுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பிரதமரின் முடிவு. பாஜக வளர்ச்சி அடைந்துவிட்டது என்பது உண்மை. பொறுத்திருந்து பாருங்கள் வேட்பாளர்களின் பட்டியலை விரைவில் அறிவிக்க இருக்கிறோம்” என்றார்
உதயநிதி ஸ்டாலின் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எதை வேண்டுமென்றாலும் பேசுவார்கள். உதயநிதி ஸ்டாலினின் பேக்ரவுண்ட் என்ன? உதயநிதி ஸ்டாலினின் அப்பா பெயரையும், தாத்தா பெயரையும் எடுத்துவிட்டால் அவரால் இரண்டு ஓட்டுகள் வாங்க முடியுமா? கருணாநிதி என்ற பெயர் இருக்கக் கூடாது, ஸ்டாலின் என்ற பெயர் இருக்க கூடாது உதயநிதி ஸ்டாலின் யார்? ரஜினி, கமல்ஹாசனை போல பெரிய நடிகரா உதயநிதி ஸ்டாலின்?
உதயநிதி அவருடைய அப்பா சம்பாதித்த பணத்தில் படத்தில் நடித்த ஃபெயில்டு ஆக்டர் (தோல்வியுற்ற நடிகர்). உதயநிதி என்பவர் தாத்தா பெயரையும், அப்பா பெயரையும் பயன்படுத்திய ஒரு எம்எல்ஏ, அமைச்சர். பிரதமர் மோடியின் கால் நகத்தில் இருக்கக்கூடிய தூசிக்கு கூட உதயநிதி சமம் கிடையாது. உதயநிதி ஸ்டாலினுக்கு மோடியின் தாத்தாவைப் பற்றி பேசுவதற்கு என்ன இருக்கிறது? உதயநிதி அவருடைய தாத்தாவை வைத்து அரசியலுக்கு வந்தவர்” என்றார் அண்ணாமலை.