சென்னை: பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்றம் இருவருக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது. ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகன் தரப்பில், “பெற்றோர் இல்லாமல் தங்களது 4 வயது குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்ற கோரிக்கையினை முன் வைத்தனர்.
ஆனால், பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் இருந்து, இருவருக்கும் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ஏனென்றால், விசாரணை என்பது முறையாக நடைபெறவில்லை. விதிகளை பின்பற்றி விசாரணை நடைபெறவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுக்கு காவல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “வழக்கு தொடர்பாக இதுவரை 16 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரை உரிய அதிகாரியை கொண்டு முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் சாட்சியை கலைக்ககூடும் என்கிற வாய்ப்பு இருப்பதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இரண்டு வாரங்களுக்கு நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
பின்னணி: செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்டோ மதிவாணனும், அவரது மனைவி மெர்லினாவும் தங்களது வீட்டில் பணிபுரிந்த 18 வயது பணிப்பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
வழக்குப் பதிவு செய்யப்பட்டது முதலே, ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில், இருவரையும் தமிழக தனிப்படை போலீஸார் ஆந்திரா அருகே கைது செய்தனர்.