கிருஷ்ணகிரி: “பாஜகவுக்கு தைரியம் இருந்தால், தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் 2 பேரை மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வைக்க முடியுமா?” என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி சவால் விடுத்து உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சூளகிரியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளர் நடிகர் சிங்கமுத்து பங்கேற்று பேசினார். தொடர்ந்து அதிமுக துணை பொதுச் யலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசியது: “தமிழகத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு உயர்ந்திருக்கிறது என்றால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தேர்தலில் போட்டியிடாமல் ஏன் ராஜ்சபா உறுப்பினராக தேர்வு செய்தீர்கள். தேர்தல் தோல்வி அச்சம் காரணமா?.
மேலும், தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரை வருகிற மக்களவைத் தேர்தலில் தைரியம், தில்லு இருந்தால் தமிழகத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வையுங்கள். அப்போது தெரியும், தமிழக மக்கள் உங்களுக்கு எப்படி பாடம் புகட்டுவார்கள் என்று.
தமிழகம் சீரழிந்துவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார். ஆனால், தமிழகம் எல்லாத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக இருக்கிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில், தமிழகத்துக்கு மத்திய அரசின் பல்வேறு விருதுகள் கொடுத்துள்ளது. அதே சமயத்தில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு ஏன் அந்த விருதுகள் வழங்க முடியவில்லை. மக்கள் ஏமாற்றும்படி பேசக்கூடாது. நன்கு சிந்தித்து வாக்களிக்கும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.
இதனால்தான் கடந்த 50 ஆண்டு காலமாக தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்காமல், திராவிட கட்சிகளை வெற்றி பெற செய்து வருகின்றனர். அதிமுகவை பொறுத்தவரை எங்களுக்கு போட்டி திமுக தான். தற்போது 2வது இடத்துக்கு வந்துவிட்டோம் என கூறும் பாஜகவினர், தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு பின்பு தான் எந்த இடத்திற்கு வந்தீர்கள், எத்தனை இடத்தில் டெபாசிட் இழந்தீர்கள் என தெரியவரும்” என்று அவர் பேசினார்.