மதுரை: திண்டுக்கல் மாவட்டம் பாடியூரில் அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறை மறுத்துள்ள நிலையில், மாநில தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளுமா என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘திண்டுக்கல் அடுத்துள்ள பாடியூரில் 30 அடி உயரமுள்ள கோட்டை உள்ளது. தற்போது இந்தக் கோட்டை மண்ணால் மூடிப்போயுள்ளது. கோட்டைமேடு பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய முதல் கட்ட அகழாய்வில் சங்க கால மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், மண்ணால் உருவாக்கப்பட்ட சமையல் பாத்திரங்கள், சுடுமண் பொம்மைகள், திருகுகல், அகல் விளக்கு கண்டுபிடிக்கப்பட்டன.
முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், ஈமச் சடங்குகளுக்கு பயன்படுத்தப்பட்ட மண்பாண்டங்களின் எச்சங்களும் கிடைத்தன. படை வீரர்கள் முகாமிட்டிருந்த இப்பகுதியில் பழங்காலத்தில் கடும் போர்கள் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்தப் பகுதியில் மேலும் அகழ்வாய்வு பணிகள் மேற்கொண்டால், பல பழமையான அரிய பொருட்கள் மற்றும் தகவல்கள் கிடைக்கும். எனவே, பாடியூரில் தொடர்ந்து அகழாய்வு பணி மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி எம்.சுதீர்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய தொல்லியல் துறை சார்பில், ‘திண்டுக்கல் பாடியூரில் அகழாய்வு நடத்த எந்த சாதகமான சூழலும் இல்லை. அகழாய்வு நடத்தக் குறிப்பிடும் இடங்களை சுற்றி கட்டிடங்கள் உள்ளன. தமிழகத்தில் பல இடங்களில் பழமையான பொருட்கள் கிடைத்துள்ளன. அங்கெல்லாம் அகழாய்வு நடத்துவது என்பது சாத்தியமற்றது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு, ”பாடியூரில் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு நடத்துமா? கீழடியில் குறைந்த பரப்பளவு கொண்ட இடத்தில்தான் அகழாய்வு நடத்தப்பட்டது. அந்த இடத்தில் 2,600 ஆண்டுக்கு முந்தைய பழமையான பொருட்கள் கிடைத்தன. எனவே, பாடியூரில் அகழாய்வு நடத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் உரிய விளக்கம் பெற்று அரசு வழக்கறிஞர்கள் தெரிவிக்க வேண்டும். விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டது.