திருப்பத்தூர்: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டிய ஆந்திர மாநில அரசை கண்டித்து அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று (வெள்ளிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆந்திர மாநிலம், குப்பம் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டிகுப்பம் பகுதியில் உள்ள பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு தடுப்பணை கட்ட அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டினார். ரூ.215 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள இந்த தடுப்பணையில் 0.6 டிஎம்சி தண்ணீரைதேக்கி வைத்து குப்பம் தொகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு பூர்த்தி செய்ய ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.
ஆந்திர அரசின் புதிய தடுப்பணை திட்டத்துக்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மார்ச் 1-ம் தேதி திருப்பத்தூரில் ஆந்திர அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே பாலாறு பாதுகாப்பு கூட்டு இயக்கம் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று (1-ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கச்செயலாளர் முல்லை, பாலாற்று நீர்வள ஆர்வலர் அசோகன், பாலாறு பாதுகாப்புக் கூட்டு இயக்கம் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களை சேர்ந்த முனுசாமி, சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், சேதுராமன், ஹரிகிருஷ்ணன், சஞ்சய் குமார், நடராஜன், ராஜா பெருமாள், வடிவேல் சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், அன்பழகன், கெளதம், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கச்செயலாளர் முல்லை கூறும்போது, “உச்ச நீதிமன்ற உத்தரவை ஆந்திர அரசு மீறியுள்ளது. 1892-ம் ஆண்டு மைசூர் – சென்னை மாகாணம் இடையிலான நதிநீர் ஒப்பந்தத்தை ஆந்திர அரசு அப்பட்டமாக மீறியுள்ளது. ஆந்திர அரசு அராஜகபோக்குடன் பாலாற்றின் குறுக்கே ரூ.215 கோடி செலவில் புதிதாக தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இது இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்.
ஆந்திர அரசின் இத்தகைய அராஜக செயலை தடுத்து நிறுத்தவும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை விரைவாக நடத்த தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அத்து மீறி செயல்படும் ஆந்திர அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்” என்றார்.