மும்பை: மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா (யுபிடி), காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உள்ளன. இந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே கடந்த சில வாரங்களாக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், தொகுதிப் பங்கீடு முடிவடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா (யுபிடி) 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் போட்டியிட முடிவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரபூர்வ ஒப்பந்தம் இன்னும் 2 நாட்களில் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது பாஜகவும், ஒருங்கிணைந்த சிவ சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்போது, பாஜக 25 தொகுதிகளிலும், சிவ சேனா 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில், பாஜக 23 தொகுதிகளிலும், சிவ சேனா 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இம்முறை, பாஜக கூட்டணியில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவும், துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸும் உள்ளன.
முன்னதாக, இண்டியா கூட்டணியில், காங்கிரஸ் – சமாஜ்வாதி கட்சி இடையே தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி ஒதுக்கி உள்ளது. மீதமுள்ள 63 தொகுதிகளில், வேறு சில சிறிய கட்சிகளோடு இணைந்து போட்டியிட சமாஜ்வாதி கட்சி முடிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிராவிலும் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்திருப்பது, அந்தக் கூட்டணிக்கு வலிமையை சேர்த்துள்ளது.