மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்களுக்கான மாற்றுப்பராமரிப்புத் திட்டம்

“கிழக்கு மாகாணத்தில் மாற்றுப் பராமரிப்பு மற்றும் அதற்கான குடும்பங்களை வலுப்படுத்தல்” திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தல் தொடர்பாகத் தெளிவுபடுத்தும் நிகழ்வு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(29) இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளீதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு உதவி மாவட்ட தெயலாளர் ஜி. பிரணவனின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குறித்த திட்டம் தொடர்பான அறிமுகத்தை செரி நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் வி. தர்ஷன் வழங்கினார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம், ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு அமைப்பு (UNICEF) மற்றும் அரச சார்பற்ற நிறுவனமான செரி (CERRI) ஆகிய நிறுவனங்கள் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலமாக சிறுவர் பாதுகாப்பு இல்லங்களுக்கு வரும் பிள்ளைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான வேலைத்திட்டமாக இம் மாற்றுப் பராமரிப்பு மற்றும் அதற்கான குடும்பங்களை வலுப்படுத்தல் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 1204 பிள்ளைகள் சிறுவர் பாதுகாப்பு இல்லங்களில் பராமரிக்கப்படுவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 1050 சிறுவர்கள் 31 இல்லங்களில் பராமரிக்கப்படுகிறார்கள்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் சிறுவர் பராமரிப்பு மற்றும் மாற்றுப் பராமரிப்பு நிலை தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு நன்னடத்தை திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் ரிஸ்வானி ரிபாஸ் தெளிவுப்படுத்தினார்.

மாவட்டத்தில் காணப்படும் சிறுவர் பராமரிப்பின் நிலை மற்றும் நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சவால்கள் குறித்து செரி நிறுவன பிரதிப் பணிப்பாளர் என். ருக்ஷான் விளக்கமளித்தார்.

இக்கலந்துரையாடலில் பிள்ளைகள் தொடர்பான சரியான துள்ளியமான தரவுகள் காணப்படாமையினால் மாவட்டத்தில் தேவை அவசியமான பிள்ளைகளை அடையாளம் காண முடியாதிருப்பதாகவும், பாதிக்கப்படும் பிள்ளைகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேலும் திட்டமிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை செரி அரச சார்பற்ற நிறுவனத்தினால் 99 சிறுவர்கள் பராமரிக்கப்படுவதுடன் போதிய தகவல் இருக்குமாயின் பிள்ளைக் குடும்பங்களிலிருந்து பிரிக்காது முடிந்த வரை பராமரிக்கலாம் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ரி. மதிராஜ், மாவட்ட உள சமூக இரணப்பாளர் பிரபாகர், மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் மற்றும் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பணியாற்றும் சிறுவர் உரிமை மேம்பாடு, சிறுவர் நன்னடத்தை, முன் பள்ளி, பெண்கள் அபிவிருத்தி ஆகிய துறைசார் அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.