கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. இந்நிலையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி, மேற்கு வங்கம் சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை அன்று ஹூக்ளியில் உள்ள ஆரம்பாக் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். சனிக்கிழமை அன்று நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகரில் நடைபெற உள்ள கூட்டத்திலும் பேச உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிலும் சந்தேஷ்காலி விவாகரத்தை பாஜக விமர்சித்து வருகிறது. இந்த சூழலில் பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார்.
அதேநேரத்தில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் செயல்பாட்டை மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியை, மம்தா சந்தித்தார். இந்த சந்திப்பு கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு சேர வேண்டிய நிதியை மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் அரசு சொல்லி வருகிறது. இது தொடர்பாக கடந்த டிசம்பரில் பிரதமர் மோடியை தனது கட்சி எம்.பி-க்களுடன் இணைந்து டெல்லியில் மம்தா சந்தித்து இருந்தார்.
“இது மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பு. பிரதமரை வரவேற்க என்னால் செல்ல முடியவில்லை. அதன் காரணமாக அவரை சந்திக்க இங்கு வந்தேன். இதில் நாங்கள் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை. மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ள தொகையை விரைந்து விடுவிக்க வேண்டும் என பிரதமரிடம் தெரிவித்தேன்” என பிரதமரை சந்தித்த மம்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.