மேற்கு வங்கத்தில் ஜார்கிராம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், “வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் காஸ் சிலிண்டர் விலை ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை உயரலாம். அதன்பிறகு நாம் விறகு அடுப்புக்குத்தான் செல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்களை நடத்தி மக்களிடம் உரையாற்றி வருகின்றன. இந்நிலையில், மேற்கு வங்கம் மாநிலத்தில் நடைபெற்றுவரும் கூட்டங்களில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக தலைமையிலான மத்திய
அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். மத்திய அரசு ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு வீடு கட்டித் தருகிறது. இத்திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு நிலுவையை வழங்காமல் உள்ளது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து சமீபத்திய கூட்டத்தில் பேசிய அவர், ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மேற்கு வங்க மாநிலத்துக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை ஏப்ரல் மாதத்துக்குள் மத்திய அரசு வழங்க வேண்டும். இல்லையென்றால், மே மாதம் முதல் எங்களது அரசே, 11 லட்சம் ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும். நாங்கள் யாசகம் கேட்கவில்லை. எங்களுக்கான உரிமையைத்தான் கேட்கிறோம்” என்று தெரிவித்தார்.