சென்னை: விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும்போது கூடுதலாக ரூ.40 செலுத்தினால் கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பிற பகுதிகளை மாநகர பேருந்து மூலம் அடையும் வகையிலான திட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 திட்டங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார். அதன்படி, அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகள், ரூ.40 கூடுதலாகக் கட்டணம் செலுத்தும் பட்சத்தில் கால விரயமின்றி, கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கும், சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து கிளாம்பாக்கத்துக்கும், 4 மணி நேரத்துக்குள் 2,3 மாநகர பேருந்துகளில் பயணம் செய்து தாங்கள் செல்லும் இடத்தை விரைவாக அடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் இன்று (மார்ச் 1) முதல் நடைமுறைக்கு வருகிறது.
மேலும், மாநகர போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான செல்போன் செயலியையும் அமைச்சர் அறிமுகம் செய்தார். இதன் மூலம் நிர்வாக சுற்றறிக்கைகள் மற்றும் பல்வேறு செய்திகளை பணியாளர்கள் அறிந்துகொள்ள
வும், விடுப்பு எடுக்க விண்ணப்பிக்கவும் முடியும்.