டாக்கா: வங்கதேசத்தில் 6 தளங்கள் கொண்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 43 பேர் பலியாகினர். பலர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் 6 தளங்கள் கொண்ட வணிக வளாகம் ஒன்றில் நேற்று (வியாழக்கிழமை) பின்னிரவு தீவிபத்து ஏற்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
விபத்து குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் டாக்டர் சமந்தா லால் சென் இன்று (வெள்ளிக்கிழமை) காலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சரியாக நேற்றிரவு (வியாழன் இரவு) 9.50 மணிக்கு அந்தக் கட்டிடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அது மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது. மேல் தளங்களிலும் உணவகங்கள், துணிக் கடைகள் இருந்தன. இதனால் தீ இன்னும் எளிதாகப் பற்றிப் பரவியது.
13 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் தீயணைப்பு வீரர்கள் 75 பேரை வெளியேற்றினர், இவர்கள் 42 பேர் மயங்கிய நிலையில் இருந்தனர். டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 33 பேர் இறந்தனர். 10 பேர் அருகிலுள்ள ஷேக் ஹசினா தேசிய தீக்காய சிகிச்சை மையத்தில் உயிரிழந்தனர். 22 பேர் தீவிர தீக்காயங்களுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்கள் தீவிர சுவாசக் கோளாறும் ஏற்பட்டுள்ளது.” என்றார். அமைச்சரும் தீக்காய சிகிச்சை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சடலங்கள் பல அடையாளம் காண இயலாத அளவுக்கு எரிந்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினர்.
உள்ளூர்வாசிகள் விபத்து குறித்து கூறுகையில், “அந்தக் கட்டிடம் மிகவும் ஆபத்தானதாகவே கருதப்பட்டது. ஒவ்வொரு தளத்திலும் காஸ் சிலிண்டர்கள் உண்டு. படிகளில் கூட சிலிண்டர்கள் அடுக்கி வைத்திருப்பார்கள். அதனால் அது ஆபத்தான கட்டிடமாகவே இருந்தது” என்றனர். விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து டாக்கா மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.