India National Cricket Team: ஐபிஎல் தொடர் (IPL 2024) வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் என்றாலே கோடை காலத்தில் இந்தியாவில் கிரிக்கெட் கொண்டாட்டம் தொடங்கிவிடும் எனலாம். ஐபிஎல் தொடர் தொடங்கிவிட்டாலே தினந்தினம் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆனால், ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 22 நாள்கள் இருக்கும் இப்போதே இந்திய கிரிக்கெட்டில் பரபரப்பு தொடங்கிவிட்டது எனலாம்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி (Team India) 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது, இன்னும் 1 போட்டி வேறு மிச்சம் இருக்கிறது. இந்தியாவின் அதிரடி வெற்றியை தொடர்ந்து, நேற்று முன்தினம் வெளியான பிசிசிஐ ஒப்பந்த பட்டியல் (BCCI Contract) இந்திய கிரிக்கெட்டில் மேலும் பரபரப்பை உண்டாக்கியது எனலாம். குறிப்பாக, செதேஷ்வர் புஜாரா, உமேஷ் யாதவ், ஷிகர் தவாண், யுஸ்வேந்திர சஹால், தீபக் ஹூடா உள்ளிட்டோர் மட்டுமின்றி இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்களும் ஒப்பந்த பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
ஒப்பந்தத்தில் ஹர்திக் பாண்டியா
இது ஒருபுறம் இருக்க, நீண்ட நாள்களாக கிரிக்கெட் விளையாடமால் இருக்கும் ஹர்திக் பாண்டியா மட்டும் இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் போன்று ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல், தொடர்ந்து ஏன் பட்டியலில் நீடிக்கிறார் என்ற கேள்வியும் எழுந்தது. கடந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதன்பின் அந்த தொடரில் இருந்து விலகியது மட்டுமின்றி தற்போது வரை அவர் எந்த போட்டியிலும் விளையாடவே இல்லை.
இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி டிராபி போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காததால் அவர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஹர்திக் பாண்டியாவும் (Hardik Pandya) ரஞ்சி டிராபியில் விளையாடவில்லை. ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்தில் கிரிக்கெட்டில் விளையாடவதில்லை. குறிப்பாக அவரின் உடற்தகுதியை கருத்தில் கொண்டு டெஸ்டில் அவர் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. அந்த வகையில், ஹர்திக் பாண்டியா பிசிசிஐக்கு அளித்த வாக்குறுதியினால், அவர் ஒப்பந்த பட்டியலில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹர்திக் பாண்டியாவின் வாக்குறுதி
அதாவது, தேசிய அணிக்காக தான் விளையாடாத நேரத்தில், சையத் முஷ்டாக் டி20 தொடர், விஜய் ஹசாரே தொடர் ஆகிய முதல் தர போட்டிகளில் தான் பரோடா அணிக்காக விளையாடுவேன் என ஹர்திக் பாண்டியா பிசிசிஐயிடம் உறுதியளித்திருப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே ஹர்திக் பாண்டியா ஒப்பந்தப் பட்டியலில் நீடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது. கடந்த 2022-23 சீசனிலும் ஒப்பந்தப் பட்டியலில் A தரவரிசையில் இருந்த ஹர்திக் பாண்டியா, எவ்வித மாற்றமும் இன்றி அதே தரவரிசையில் நீடிக்கிறார். இந்த தரவரிசையில் இருப்போருக்கு ஆண்டு சம்பள் ரூ. 5 கோடியாகும்.
குஜராத் மாநிலத்தின் வதோதரா நகரில் தனிப்பட்ட முறையில் பயிற்சி எடுத்து வந்த ஹர்திக் பாண்டியா உடன்தான் இஷான் கிஷனும் பயிற்சி எடுத்து வந்தார். இருப்பினும், ஹர்திக் பாண்டியா பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் அடிக்கடி தனது உடற்தகுதியையும் நிரூபித்தது அவருக்கு தற்போது சாதகமாகிவிட்டது. உலகக் கோப்பைக்கு பின் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ஹர்திக் பாண்டியா கடந்த வாரம் டிஒய் பாட்டீல் தொடரில் ரிலையன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.