வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நாக்பூர்: உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் வீடியோவால் பிரபலமான நாக்பூரைச் சேர்ந்த டோலி சாய்வாலா, ‛‛எதிர்காலத்தில் பிரதமர் மோடிக்கும் தேநீர் தயாரித்து கொடுக்க ஆசைப்படுகிறேன்” எனக்கூறியுள்ளார்.
நம் நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் சமீபத்தில் வந்தார். நேற்று முன்தினம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். நேற்று மஹாராஷ்டிராவில் நாக்பூரின் சதர் பகுதியில் உள்ள சாலையோர கடையில் தேநீர் பருகினார். நாக்பூரில் மிகவும் ஸ்டைலாக தேநீர் தயாரிப்பு பணிகளில் ஈடுபடுபவர் டோலி சாய்வாலா. சமூக வலைதளத்தில் பிரபலமாக அறியப்படும் இவரது கடையில் நேற்று பில்கேட்ஸ் தேநீர் அருந்தினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக துவங்கியது.
இந்நிலையில், டோலி சாய்வாலாவிடம் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் பேட்டி எடுத்தது. அப்போது அவர் கூறியதாவது: முதலில் எனக்கு அவர் யார் என தெரியாது. வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தேநீர் அருந்த வந்தார் என்று தான் நினைத்து அவருக்கு தேநீர் தயாரித்து வழங்கினேன். மறுநாள் தான், நான் யாருக்கு தேநீர் வழங்கினேன் என்பது தெரியவந்தது. அவருடன் நான் எதுவும் பேசவில்லை. அவர் என் முன் நின்று கொண்டிருந்தார். நான் தேநீர் தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருந்தேன். தேநீரை அருந்திய பில்கேட்ஸ், நன்றாக இருந்தது என பாராட்டு தெரிவித்தார். நான் தேநீர் தயாரிக்கும் முறையை தென் இந்திய திரைப்படத்தை பார்த்து தான் கற்றுக் கொண்டேன். வரும் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தேநீர் தயாரித்து கொடுக்க ஆசைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement