இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில் வெளியாகவுள்ள திரைப்படம் வணங்கான்.
இத்திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின், சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெருவெற்றி பெற்ற ‘பிரேமலு’ படத்தில் நடித்திருந்த நடிகை மமிதா பைஜூ, தான் விலகிய வணங்கான் திரைப்பட அனுபவங்கள் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். “ வணங்கான் படத்தில் முதலில் நான் ஒப்பந்தமாகியிருந்தேன். அந்த படத்தில் வில்லுப்பாட்டு தொடர்பான காட்சி ஒன்று இருந்தது. அதில் நான் இசைக்கருவி ஒன்றை வாசித்தபடி பாட வேண்டும்.
பயிற்சி எடுத்துக்கொள்ள போதிய நேரம் எனக்கு கிடைக்கவில்லை. திடீரென பாலா சார் என்னை அதை செய்துகாட்டும்படி கூறினார். அப்போது நான் அதற்கு தயாராகி இருக்கவில்லை. அதனால் ரீடேக் எடுத்துக்கொண்டேன். அப்போது எனக்கு பின்னாலிருந்த பாலா சார் என்னை தோள்பட்டையில் அடித்தார் என்று கூறியிருந்தார். மமிதா பைஜூ பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் இயக்குநர் பாலாவிற்கு எதிர்ப்புகளைத் தெரிவித்து விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் நடிமை மமிதா பைஜூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், “ வணங்கான் திரைப்படத்தில் திரைப்படத்தில் நடித்தது தொடர்பாக இணையத்தில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை. திரைப்பட புரோமோஷன் நேர்காணலின் ஒரு பகுதி, பொறுப்பற்ற தலைப்பின் மூலம் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் ப்ரீ புரொடக்ஷன், புரொடக்ஷன் என ஒரு வருடத்திற்கு மேல் பாலா சாருடன் பணிபுரிந்திருக்கிறேன். நான் ஒரு சிறந்த நடிகையாக மாறுவதற்கு அவர் என்னை வழிநடத்தினார்.
வணங்கான் படத்தில் பணிபுரிந்தபோது மனரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ எந்த விதமான துன்புறுத்தலையும் நான் அனுபவிக்கவில்லை. தொழில்ரீதியான ஒப்பந்தங்கள் காரணமாகவே அந்தப் படத்திலிருந்து நான் விலகினேன். செய்தியை வெளியிடும் முன் சரிபார்க்க என்னை தொடர்பு கொண்ட ஊடக நிறுவனங்களுக்கும் நன்றி” என தெரிவித்து பாலா மீதான விமர்சனத்திற்கு முற்றிப்புள்ளி வைத்திருக்கிறார்.