பெங்களூரு : ”உயிர் பறிபோகும் போது, மற்றொருவரின் உயிரை காப்பாற்ற நினைப்பது சாதாரண விஷயமல்ல. உடல் உறுப்பு தானம் அதிகரிக்க வேண்டும்,” என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்திற்கு, சுகாதார துறை சார்பில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, முதல்வரின் அரசு இல்லமான காவேரியில் நேற்று நடந்தது.
பாராட்டு சான்றிதழ் வழங்கி முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
உடல் உறுப்பு தானத்தில், நாட்டிலேயே கர்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது. தானம் செய்பவரின் குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளை அரசு கவனித்து கொள்ளும்; அவர்களுக்கு துணை நிற்கும்.
உயிர் பறிபோகும் போது, மற்றொருவரின் உயிரை காப்பாற்ற நினைப்பது சாதாரண விஷயமல்ல. மற்றவர்களின் உயிரை காப்பாற்றும் பணியை நீங்கள் செய்திருக்கிறீர்கள். உடல் உறுப்பு தானம் செய்ய அதிகளவில் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பேசுகையில், ”நாட்டில் இதுவரை, உறுப்பு தானம் செய்ய பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை, 8,000க்கும் அதிகமாக உள்ளது. கடந்த ஓராண்டில் 178 உடல் உறுப்பு தானம் மட்டுமே நடந்து உள்ளது.
”உடல் உறுப்பு தானம் செய்வோரின் குடும்பத்தினருக்கு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் அல்லது மாவட்ட கலெக்டர் பாராட்டு கடிதம் வழங்குவர். ஒருவரின் உடல் உறுப்பு தானம் மூலம், எட்டு பேரின் உயிரை காப்பாற்ற முடியும்,” என்றார்.
உடல் உறுப்பு தானம் செய்தோரின் குடும்பத்திற்கு, முதல்வர் சித்தராமையா பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். இடம்: காவேரி இல்லம், பெங்களூரு.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement