“எனக்காக யாருமே இல்லைன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா, இத்தனை பேரு இருக்கீங்க” என நெகிழ்ந்தபடி பேசுகிறார் சேலத்தைச் சேர்ந்த நாகசக்தி.
‘பார்வையற்ற தம்பி, இரண்டு பெண் குழந்தைகள், கைவிட்ட கணவர் – மாற்றுத்திறனாளி பெண்ணின் எதிர்நீச்சல்!’ என்கிற தலைப்பில் சேலத்தைச் சேர்ந்த நாகசக்தியின் போராட்ட வாழ்க்கை குறித்து விகடன்.காமில் வெளியிடப்பட்ட கட்டுரை பலரது இதயத்தையும் கலங்கடித்தது. இதனைத் தொடர்ந்து, விகடன் வாசகர்கள் செய்த உதவிகளுக்கு தன் நெகிழ்ச்சியையும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்தியிருக்கிறார் நாகசக்தி.
“எனக்குன்னு விகடன் செய்த உதவி, வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. நானும் என் தம்பியும் குழந்தைகளும் எங்களுக்குன்னு யாருமே இல்லைங்குற விரக்தியில இருந்தோம். இந்த உலகமே எங்களை கைவிட்டுடுச்சு அப்படிங்குற சூழலில் தவிச்சிக்கிட்டிருந்தோம். ஆனா, இப்போ முகம் தெரியாத இத்தனை பேர், ‘உங்களுக்காக நாங்க இருக்கோம்’னு ஆதரவு கரம் நீட்டியிருக்கிறது, பிள்ளைங்களோட எதிர்காலத்துக்காக இன்னும் போராடணும்ங்குற உத்வேகத்தை கொடுத்திருக்கு. இத்தனை நாளா நாங்க எல்லாம் உசுரோட இருக்கோமா, இல்லையான்னு தெரிஞ்சுக்காத நண்பர்கள்கூட விகடன் கட்டுரையை படிச்சுட்டு மெசேஜ் பண்ணினாங்க. என் பொண்ணுக்கிட்ட பேசினாங்க. இது, கனவா, நினைவான்னு ஆச்சர்யப்படுற அளவுக்கு இருக்கு.
இது எல்லாமே விகடனாலதான் நடந்திருக்கு. இந்த அளவுக்கு கஷ்டப்படுறோம்னு நான் சொன்னதுமே விகடன் வாசகர்கள் இதுவரைக்கும் 3,14,376.00 ரூபாய் அனுப்பி உதவி செஞ்சிருக்காங்க. எங்க கஷ்டத்தை உணர்ந்து உதவி செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவங்க குடும்பங்களுக்காக கடவுள்கிட்டே வேண்டிக்குவேன். இத்தனை நாள் நான் வேலை தேடிக்கிட்டிருந்தேன். இனிமே, அப்படித் தேடாம ஜெராக்ஸ் கடை வெச்சு என் சொந்தக் காலில் நிற்கலாம்ங்குற தன்னம்பிக்கையை கொடுத்துட்டீங்க. நீங்க செய்த உதவித்தொகையில அதற்கான ஏற்பாடுகளைச் செய்யப்போகிறேன்” என கைகூப்பி கண்ணீரோடு வேண்டிக்கொள்கிறார் நாகசக்தி.
நாகசக்திக்குப் பிறந்ததிலிருந்தே காது கேட்காது, பேசவும் முடியாது. அப்பா – அம்மா இறந்துவிட்டார்கள். தம்பிக்கு மூளை வளர்ச்சி பாதிப்பு. திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், நாகசக்தியின் கணவர் பிரிந்து சென்றுவிட்டார். மாற்றுத்திறனாளி என்பதால் வேலையும் இன்றி, தம்பியின் மருத்துவச் செலவுகளுக்கும், பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கும் வழியின்றி போராடி வருகிறார். இந்தச் சூழலில் எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் நாகசக்திக்கு ஒரு துடுப்பாய் கைதூக்கிவிட்ட வாசகர்களுக்கு வெறும் நன்றியை மட்டுமே சொல்லிவிடமுடியாது.
நாகசக்தியின் குடும்பத்துக்கு உதவிய விகடன் வாசகர்களின் விவரங்கள்:
இவர்கள் மட்டுமின்றி, பலரும் அந்தக் குழந்தைகளுக்கான கல்விச் செலவுகளை ஏற்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். அவர்களுக்கும் நன்றிகள் பல!