Google: தேடுபொறி (Search engine) தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய நிறுவனமாக இருக்கும் கூகுள், இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய எதிரியாக மாறியிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நம் நாட்டின் மிக முக்கியமான நிறுவனங்களான பாரத்மேட்ரிமோனி, நாக்ரி, சாதி, குக்கு எப்.எம். உள்ளிட்ட பல செயலிகளை நீக்கியிருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு என்ன காரணம், கூகுள் இப்படி செய்தது சரியா என்பதைத் தெரிந்துகொள்ள முற்பட்டோம். விஷயம் இதுதான்…
ஒரு நிறுவனம் தனது செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் வைத்திருந்து, அந்த செயலி மூலம் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை எனில், கூகுள் நிறுவனம் வருமானப் பகிர்வு எதுவும் கேட்பதில்லை. அப்படி அல்லாமல், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகள் மூலம் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கும்போது, அந்தக் கட்டணத்தில் ஒரு பகுதியைத் தனக்குத் தரவேண்டும் என கூகுள் புதிதாக நிபந்தனை விதிக்கத் தொடங்கி இருக்கிறது என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் பிரச்னைக்கு மூலகாரணம். அதாவது, இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அடையும் வருமானத்தை தங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிறது கூகுள்.
இந்த வருமானப் பகிர்வு அதிகபட்சம் 26% அளவுக்கு இருக்கிறது. கிடைக்கும் வருமானத்தில் 26% கூகுளுக்குத் தரவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என டெக்னாலஜி நிறுவனங்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது, சென்னை உயர் நீதிமன்றம் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது.
என்றாலும் கூகுள் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. இந்திய நிறுவனங்கள் தான் கேட்கும் அளவுக்கு வருமானப் பகிர்வை மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வந்தது.
இந்த நிலையில், கூகுள் நிறுவனம் இப்போது என்ன சொல்கிறது தெரியுமா? ‘‘இந்திய நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேல் கால அவகாசம் கொடுத்துவிட்டோம். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எங்களது கொள்கையை ஏற்றுக்கொண்டுவிட்டன. குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறது. கடந்த பிப்ரவரி 9-ம் தேதி அன்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத செயலிகளை நீக்குவதற்கு தடை ஏதும் விதிக்கவில்லை. எனவே, 10-க்கும் மேற்பட்ட செயலிகளை நாங்கள் நீக்கி இருக்கிறோம்’’ என கூகுள் தெரிவித்திருக்கிறது.
இப்படி நீக்கப்பட்ட செயலிகளில் முக்கியமானது பாரத் மேட்ரிமனியின் செயலி. இது தொடர்பாக பாரத் மேட்ரிமோனியின் சி.இ.ஒ.முருகவேல் ஜானகிராமனிடம் பேசினோம். அவர் நம்மிடம் சொன்னதாவது…
Google: ‘‘சில ஆண்டுகளுக்குமுன் இந்த பிரச்னை குறித்து விசாரித்தபின் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (Competition Commission of India), ‘‘அனைவருக்கும் சம வாய்ப்பை வலியுறுத்தியது. கூகுள் நிறுவனம், மற்ற பேமெண்ட் கேட்வேகளைப் பயன்படுத்த தடை விதிக்கக் கூடாது, நியாயமற்ற் விதிமுறைகளை உருவாக்கக்கூடாது’’ என்று தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் தற்போது எங்களை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி இருக்கிறது கூகுள் நிறுவனம்.
கூகுள் நிறுவனத்தின் பேமெண்ட் கேட்வேயைப் பயன்படுத்தினால் அதற்கேற்ப நாங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். ஒருவேளை, மற்ற பேமெண்ட் கேட்வே-யைப் (உதா: போன்பே) பயன்படுத்தினாலும் அவர்களுக்கு செலுத்தியது போக கூகுள் நிறுவனத்துக்கு கணிசமான அளவில் நாங்கள் கட்டணம் கட்ட வேண்டும் என கூகுள் வலியுறுத்தி இருக்கிறது. இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
ஆப்பிள் ஸ்டோரும் இதேபோன்ற விதியைதான் வைத்திருக்கிறது. கூகுளைப் போல, ஆப்பிள் நிறுவனத்தின் செயலும் தவறுதான். ஆனால், 90% ஆன்ட்ராய்ட் போன்கள்தான் உள்ளன. பெருமளவு சந்தையை வைத்திருக்கும் ஒரு நிறுவனம் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. கூகுள் நிறுவனத்தின் இந்த செயல்பாடுகளை நிறுத்த சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என முருகவேல் ஜானகிராமன் கூறினார்.
Google: கூகுள் பேமெண்ட் கேட் பயன்படுத்துவதற்குக் கட்டணம் வசூலிப்பதற்கும் வருமானத்தில் கணிசமான பங்கினைக் கேட்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. கூகுளின் இந்த நடவடிக்கையை இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் ‘கூகுள் வரி’ என்றே அழைக்கிறார்கள்.
கூகுள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்து ‘எக்ஸ்’ வலைதளத்தில் தொழிலதிபர்கள் பலரும் தங்கள் கருத்துகளை பதிவேற்றி வருகிறார்கள்.
டி.வி.எஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கோபால் ஶ்ரீநிவாசன், ‘‘அதிகார துஷ்பிரயோகத்திற்கான மிகச் சரியான உதாரணம் இது. இதை நாம் நிச்சயம் நீக்கியாக வேண்டும். ஒ.என்.டி.சி அதிகாரிகளும், போன் பே நிறுவனமும் ஒரு பிளே ஸ்டோரை உருவாக்குவதற்கான சோதனையை உடனே தொடங்க வேண்டும்’’ என்று எக்ஸ் வலைதளத்தில் கருத்து வெளியிட்டிருப்பதுடன், இதனை மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு ‘டேக்’ செய்திருக்கிறார்.
ஏகபோகம் (Monopoly) என்பது ஆபத்தான விளைவையே ஏற்படுத்தும். தேடுபொறி தொழில்நுட்பத்தை ஏகபோகமாக வைத்திருக்கும் கூகுள் நிறுவனம் தான் சொல்வதை எல்லா நிறுவனங்களும் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் எந்த நிறுவனத்தையும் மக்களிடம் சென்று சேரவிடாமல் தடுக்க நினைப்பது எந்த வகையிலும் சரியான விஷயமாக இருக்காது. இந்த விஷயத்தில் மத்திய அரசாங்கம் உடனடியாக தலையிட்டு, இந்திய நிறுவனங்களின் நலனைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!