சென்னை: தமிழகம் முழுவதும் நாளை (03.02.2024) போலியோ சொட்டு மருந்துகள் அளிக்கும் நிகழ்வுகள் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதை போன்று நடத்தப்படவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் சென்னை தெற்கில், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், மதுரவாயில் உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 2 நாட்களாக பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதன்படி இன்று சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காமராஜர்புரம் பகுதியில் மிகப்பெரிய மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போலோ, காவேரி, ரேலா, ராமச்சந்திரா போன்ற பல்வேறு மருத்துவமனைகளின் சார்பில், 14 மிகப்பெரிய மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் 04.03.2024 அன்று டெல்டா மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.247.50 கோடி செலவில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தொடங்கி வைக்கவுள்ளார்.
இது நாகப்பட்டிணம், வேளாங்கன்னி மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கு பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும். முதல்வர் முன்னிலையில் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி 12.01.2022 அன்று பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்றுவந்த மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று 700 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக 04.03.2024 அன்று முதல்வரால் திறந்து வைக்கப்படவுள்ளது. மேலும், மயிலாடுதுறை, திருவாரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் புதியதாக கட்டப்பட்டுள்ள ரூ.17 கோடி செலவிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைக்கப்படவுள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை (03.02.2024) போலியோ சொட்டு மருந்துகள் அளிக்கும் நிகழ்வுகள் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதை போன்று நடத்தப்படவுள்ளது. போலியோ என்ற இளம்பிள்ளை வாத நோய்க்கு உலகம் தோறும் முற்றுப்புள்ளி வைக்கப்படுவதை போன்று தமிழ்நாட்டில் போலியோ நோய் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாளை UNICEF நிறுவனம், பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் இணைந்து போலியோ சொட்டு மருந்து தரும் நிகழ்வு நாளை நடைபெறுகிறது.
5 வயதிற்குட்பட்ட 57,84,000 குழந்தைகள் பயன்பெறும் வகையில் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து அளிக்கும் முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் 2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி 100 % தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகள் செலுத்துவதை உறுதிபடுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.