சென்னை: தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் ஒருவரது மகன் பிடிபட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை கிண்டி ஈக்காட்டுதாங்கலில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்துக்கு நேற்று காலை, தொலைபேசியில் பேசிய நபர், ‘‘இன்னும் சற்று நேரத்தில் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும். முடிந்தால் தடுக்கச் சொல்லுங்கள்’’ என்றுகூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவரது உத்தரவின்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாயுடன் தலைமைச் செயலகம் விரைந்து தலைமைச் செயலகத்தின் நுழைவு வாயில் முதல், அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையின் முடிவில் எந்த பொருட்களும் சிக்கவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சிக்கு வந்த செல்போன் எண் விவரங்களை சேகரித்து, மிரட்டல் விடுத்தது யார்? என சைபர் க்ரைம் போலீஸார் விசாரணையில் இறங்கினர்.
பெற்றோருக்கு எச்சரிக்கை: இதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரின் 42 வயதுடைய மகன் என்பது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் இருந்தார். இதனால், அவரைக் கைது செய்யாமல் பெற்றோரை எச்சரித்துவிட்டு போலீஸார் சென்னை திரும்பினர்.
இதற்கிடையே, தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். சென்னையில் உள்ள சில பள்ளிகளுக்கும் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.