குர்தாஸ்பூர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், 2024 மக்களவைத் தேர்தலில் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக விளக்கம் அளித்து மறுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், தனது தாய் ஷப்னம் சிங்குடன் சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார். இந்தச் சந்திப்புக்கு பின் யுவராஜ் சிங் 2024 மக்களவைத் தேர்தலில் பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட போகிறார் என்று செய்திகள் வெளியாகின. பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தொகுதியானது பிரபல தொகுதியாக அறியப்படுகிறது.
பதான்கோட் எல்லையை உள்ளடக்கிய இந்தத் தொகுதியானது கடந்த காலங்களில் நட்சத்திர தொகுதியாக இருந்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் கூட பாஜக சார்பில் நடிகர் சன்னி தியோல் இந்திய தேசிய காங்கிரஸின் (INC) சிட்டிங் எம்பி சுனில் ஜாக்கரை தோற்கடித்து எம்பியானார். இந்த நிலையில்தான் இந்தத் தொகுதியில் யுவராஜ் சிங் பாஜக சார்பில் போட்டியிடலாம் என்று சொல்லப்பட்டு வந்தது.
ஆனால், இந்த தகவலை மறுத்துள்ளார் யுவராஜ் சிங். இது தொடர்பாக யுவராஜ் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், “நான் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடவில்லை. மக்களுக்கு உதவுவதில் எனக்கு ஆர்வம் உள்ளது. ஆனால், அது எனது YOUWECAN அறக்கட்டளை மூலம் நான் அதைத் தொடர்ந்து செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.