புதுடெல்லி: சூப்பர்சானிக் வேகத்தில் சென்று தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை, கண்காணிப்புக்கான ரேடார் கருவிகள், போர் விமான இன்ஜின் உள்ளிட்ட 5 ராணுவ தளவாடங்களை ரூ.39,125 கோடியில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு படைகளின் திறன்களை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. பாதுகாப்பு படைகளுக்கு தேவையான தளவாடங்களை வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்தே இந்தியா கொள்முதல் செய்து வந்தது. ஆனால், தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ், உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெரும்பாலான ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய தற்போது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், 5 ராணுவ தளவாட கொள்முதல் ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று கையெழுத்திட்டது. மத்தியபாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், துறை செயலர் கிரிதர் அர்மானே ஆகியோர் முன்னிலையில் இந்த 5 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் (பிஏபிஎல்) இருந்து ரூ.19,518.65 கோடி மதிப்பில் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. கடற்டையின் போர் பயிற்சிக்கு இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படும்.
போர்க் கப்பலில் இருந்து ஏவப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகளை ரூ.988 கோடிக்கு பிஏபிஎல் நிறுவனத்திடம் இருந்து வாங்க2-வது ஒப்பந்தமும் செய்யப்பட்டது. 290 கி.மீ., 450 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்த 2 வகை ஏவுகணைகள் தரை இலக்கு, கடல் இலக்கு ஆகியவற்றை சூப்பர்சானிக் வேகத்தில் தாக்குவதற்கு உதவும். அந்த வகையில், 200-க்கும் மேற்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளை கொள்முதல் செய்ய பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்ததை அடுத்து இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
விமானப் படையில் உள்ளமிக்-29 ரக விமானத்துக்கு, மத்தியபொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்), ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் ஆர்டி-33 ஏரோ இன்ஜின்களை பொருத்துவதற்கான ஒப்பந்தம்ரூ.5,249.72 கோடியில் கையெழுத்தானது. இதன்மூலம் மிக்-29 ரக விமானங்களின் ஆயுள் காலம் நீட்டிக்கப்படும். மேலும், இவற்றை பழுதுபார்ப்பதற்கான பணிகளையும் உள்நாட்டிலேயே மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் உதவும்.
எல் அண்ட் டி நிறுவனத்திடம் இருந்து ‘சிஐடபிள்யூஎஸ்’ என்ற வான் பாதுகாப்பு கருவிகளை வாங்க ரூ.7,668.82 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தகருவிகள் மூலம் நாட்டின் முக்கியஇடங்களில் வான் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும். இத்திட்டம் பாதுகாப்பு துறையுடன் தொடர்புடைய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உதவும்.
மேலும், எல் அண்ட் டி நிறுவனத்திடம் இருந்து ரூ.5,700 கோடிமதிப்பில் சக்திவாய்ந்த ரேடார் கருவிகளை வாங்குவதற்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டது. விமானப்படையில் தற்போது பயன்பாட்டில் உள்ள நீண்டதூர கண்காணிப்பு ரேடார்களுக்கு மாற்றாக இவைபயன்படுத்தப்படும். இதன்மூலம்விமானப் படையின் வான் பாதுகாப்பு திறன் மேம்படும். இந்த ஒப்பந்தம் உள்நாட்டு ரேடார் தயாரிப்பு தொழில்நுட்பத்துக்கு ஊக்குவிப்பாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.