புதுடெல்லி: உ.பி.யில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை மீட்கும் முக்கிய முகமாக பிரியங்கா வதேரா கருதப்பட்டார். 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரியங்காவின் செல்வாக்கு உ.பி.யில் குறையத் தொடங்கியது. இந்த சூழலில் அவர் 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன் நேரடி அரசியல் களத்தில் இறங்கினார்.
கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட அவரிடம் உ.பி. மக்களவைத் தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டது. எனினும் அமேதியில் இருந்து தொடர்ந்து 3 முறை எம்.பி.யான ராகுல் அங்கு தோற்கும் நிலை ஏற்பட்டது. சோனியா காந்தியால் மட்டும் தனது ரேபரேலி தொகுதியை தக்கவைக்க முடிந்தது.
இந்நிலையில், பிரியங்கா மீண்டும் உ.பி. அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளார். இந்தமுறை அவரை ரேபரேலியில் களம் இறக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது. இங்கு கடந்த 2004 முதல் தொடர்ந்து எம்.பி.யாக இருந்த சோனியா, தற்போது மாநிலங்களவை எம்.பி.யாகி விட்டார். இதனால் பிரியங்காவை அங்கு தொடரவைக்க காங்கிரஸ் விரும்புகிறது. இளம் வயது முதல் பிரியங்காவின் உதவியாளராக இருக்கும் கே.எல்.சர்மாவிடம் ரேபரேலி தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு பிரியங்கா போட்டியிடுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்நேரமும் வெளியாக வாய்ப்புள்ளது.
அமேதியில் ராகுல்? இதனிடையே அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியால் தோற்கடிக்கப்பட்ட ராகுல் காந்தி, அங்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்புகள் தெரிகின்றன. இதற்கான அடிப்படை வேலைகளை காங்கிரஸுக்காக ஒரு தனியார் நிறுவனம் அமேதியில் செய்து வருகிறது. இதன் அறிக்கையை பொறுத்து அமேதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ராகுல் முடிவு செய்வார்.
உ.பி.யில் கடந்த மாதம் நடைபெற்ற ராகுலின் நியாய யாத்திரையில் அமேதி முக்கிய இடம் பிடித்தது. எனினும் கடந்தமுறையை போல் அவர் போட்டியிடும் இரண்டு தொகுதிகளில் ஒன்றாகவே அமேதி இருக்க வாய்ப்புள்ளது.
உ.பி.யின் 80 மக்களவைத் தொகுதிகளில் 17 தொகுதிகள் பெற்று சமாஜ்வாதியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. அமேதி தேர்தல் அமைப்பாளராக ராகுலுக்கு மிகவும் நெருக்கமான தேவானந்த் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். உ.பி.யில் காங்கிரஸ் போட்டியிடும் 17 தொகுதிகளில் அமேதியும், ரேபரேலியும் சிறப்பு கவனம் பெற்றுள்ளன.