வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட சிரஞ்சீவியின் சகோதரர்

திரையுலகை பொருத்தவரை சிலர் விழா மேடைகளில் பேசும்போது தெரிந்தோ தெரியாமலோ பேசும் சில வார்த்தைகள் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி விடும். அதன்பிறகு நாங்கள் அவ்வாறு பேசவில்லை, தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று விளக்கம் தருவார்கள். இந்த பட்டியலில் தற்போது இணைந்துள்ளார் தெலுங்கு நடிகரும், சிரஞ்சீவியின் சகோதரருமான நாகபாபு. இவரது மகன் வருண் தேஜ் கதாநாயகனாக நடித்துள்ள ஆபரேஷன் வேலன்டைன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வருண் தேஜ்.

இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றபோது அதில் பேசிய நாகபாபு, 6 அடி 3 இன்ச் உயரத்தில் இருப்பவர்கள் போலீஸ் அதிகாரியாக நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறினார். வருண் தேஜ் இதே போன்ற உயரம் கொண்டவர் என்பதால் தனது மகனை புகழும் விதமாக அவர் இவ்வாறு கூறினார். அதேசமயம் இவர் இப்படி பேசியது, இதற்கு முன்பு உயரம் குறைந்த ஹீரோக்கள் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளதை கிண்டல் பண்ணும் விதமாக இருப்பதாக கூறி சோசியல் மீடியாவின் இவருக்கு எதிரான கண்டனங்கள் குவிய ஆரம்பித்தன.

இதனைத் தொடர்ந்து, “நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை.. இப்படி உயரம் கொண்டவர்கள் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று பொதுவாக தான் கூறினேன். அதற்காக 5 அடி 3 இன்ச் உயரம் கொண்டவர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்காது என நான் கூறவில்லை. இருந்தாலும் நான் கூறியது யாரையேனும் காயப்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று சோசியல் மீடியா மூலமாக கூறியுள்ளார் நாகபாபு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.