பெங்களூரு : பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையம் தாக்கல் செய்த, ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை, ஆளும் காங்கிரஸ் கட்சியில் சூறாவளியை கிளப்பியுள்ளது. “வீட்டில் அமர்ந்து தயாரித்த அறிக்கையை தாக்கல் செய்தால், மவுனமாக இருக்கமாட்டோம்,” என, அக்கட்சியின் மூத்த தலைவர் சிவசங்கரப்பா ஆவேசமாக எச்சரித்துள்ளார்.
கர்நாடகாவில், 2013ல் சித்தராமையா முதல்வராக இருந்தபோது, ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தத் திட்டமிட்டார். இந்த பொறுப்பை பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையத்திடம் ஒப்படைத்தார். ஆணையத்தின் அன்றைய தலைவர் காந்தராஜு ஆய்வில் ஈடுபட்டார். மக்களை சந்தித்து தகவல் சேகரித்தார். ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு, கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டது.
ஜாதி வாரி கணக்கெடுப்பை முடித்து, அறிக்கை தாக்கல் செய்வதற்குள், இதை பற்றி பல ஊகங்கள் வெளியாகின. பிரபலமான சமுதாயங்களின் மக்கள்தொகையை, உள்நோக்கத்துடன் குறைத்துக் காண்பித்ததாக, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பறிக்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அறிக்கையைப் பெறக் கூடாது என, காங்கிரசாரே வலியுறுத்தினர்.
காந்தராஜு ஆய்வை முடித்து, அறிக்கை தாக்கல் செய்வதற்குள், மாநிலத்தில் ஆட்சி மாறியது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் – ம.ஜ.த., கூட்டணியோ, அதன்பின் ஆட்சிக்கு வந்த பா.ஜ.,வோ, ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை குறித்து, ஆலோசிக்கவும் இல்லை; பேசவும் இல்லை.
கடந்த 2023 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பின், ஜாதி வாரி கணக்கெடுப்பு விஷயம் முன்னிலைக்கு வந்தது. அறிக்கையை பெற முதல்வர் சித்தராமையா விரும்பினார். ஆனால் இதற்கு அனைத்துக் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
காந்தராஜு தயாரித்த அறிக்கை அரைகுறையாக உள்ளது. அதைப் பெறக்கூடாது. புதிதாக ஆய்வு நடத்தி அறிக்கை பெறும்படி வலியுறுத்தினர். அறிக்கையை பெறுவதில், முதல்வர் உறுதியாக இருந்தார்.
பட்ஜெட் கூட்டத் தொடரிலும், இதுகுறித்து காரசார விவாதம் நடந்தது. இந்நிலையில் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணைய இன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டே, முதல்வர் சித்தராமையாவிடம், ஜாதி வாரியான ஆய்வறிக்கையை நேற்று முன் தினம் தாக்கல் செய்தார். அறிக்கையின் புள்ளி விபரங்களின்படி, மாநில மொத்த மக்கள்தொகையில், சிறுபான்மையினர், தலித், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் எண்ணிக்கை 60 சதவீதம் உள்ளது.
கர்நாடகாவில் பிரபலமாக உள்ள லிங்காயத், ஒக்கலிகர்களை விட, சிறுபான்மையினர் மக்கள்தொகை அதிகம் உள்ளது. முஸ்லிம்கள் 70 லட்சம், லிங்காயத்துகள் 65 லட்சம், ஒக்கலிகர்கள் 60 லட்சம் பேர் உள்ளனர். இது விவேகமற்ற அறிக்கை என, பா.ஜ.,வினர் மட்டுமின்றி, காங்கிரசாரே விமர்சிக்கின்றனர். இந்த அறிக்கையை ஏற்கக் கூடாது என, முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
குறிப்பாக மூத்த தலைவர் சிவசங்கரப்பா, “அறிக்கையை ஏற்றுக் கொண்டால் மவுனமாக இருக்கமாட்டோம்,” என, முதல்வர் சித்தராமையாவை மறைமுகமாக எச்சரித்துள்ளார். வரும் நாட்களில் ஜாதி கணக்கெடுப்பு அறிக்கை, காங்கிரசுக்கு தலைவலியாக இருக்கும். ஏனென்றால் காங்.,கின் லிங்காயத், ஒக்கலிக சமுதாய அமைச்சர்கள், தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுதொடர்பாக, பெங்களூரில் நேற்று சிவசங்கரப்பா கூறியதாவது:
ஒன்பது ஆண்டுகள் பழமையான அறிக்கையை, அரசு நிராகரிக்க வேண்டும். ஒருவேளை அதை அங்கீகரிக்க முற்பட்டால், நாங்கள் மவுனமாக அமர்ந்திருக்கமாட்டோம். என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வோம்.
ஜெயபிரகாஷ் ஹெக்டே அறிக்கை தாக்கல் செய்துள்ள அறிக்கையில், லிங்காயத், ஒக்கலிகர், பிராமணர் மக்கள்தொகை 1.82 கோடி என, குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றவர்கள் மூன்று கோடி இருப்பதாக தகவல் உள்ளது. ஆனால் வீர சைவ – லிங்காயத்தின் உட்பிரிவுகள் உட்பட, மொத்த மக்கள்தொகை இரண்டு கோடிக்கும் அதிகம் உள்ளது.
ஆய்வு நடத்தியது காந்தராஜு, தாக்கல் செய்தது ஜெயபிரகாஷ் ஹெக்டே. இது யாருடைய அறிக்கை என, பா.ஜ.,வின் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறிய கருத்து சரிதான். எங்கள் சமுதாய மக்கள்தொகை குறித்து, எங்களுக்கு தெளிவாக தெரியும். எனவே பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையம் தயாரித்த அறிக்கை விவேகமற்றது.
எங்கள் கருத்தை அரசு கேட்காவிட்டால், இது விவேகமற்ற அறிக்கை என்பதை நிரூபிப்போம். எங்கள் சமுதாயம் குறித்து, தனிப்பட்ட முறையில் ஆய்வு நடத்த ஆலோசிக்கிறோம். அரசு என்ன முடிவு எடுக்கிறது என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம். நியாயமான முறையில் ஆய்வு நடத்துவதானால், நாங்கள் ஏற்போம்.
அறிக்கையை பெற்றதை தவறு என, நான் கூறவில்லை. அது குறித்து அமைச்சரவையில் விவாதிக்க வேண்டும். ஆனால் செயல்படுத்த முற்பட்டால், நாங்கள் எதிர்ப்புத் தெரிவிப்போம். அறிக்கையில் கூறியதை விட, எங்கள் சமுதாய மக்கள்தொகை, இரண்டு மடங்கு அதிகம். அறிக்கையை மறு பரிசீலனை செய்ய, கமிட்டி அமைக்கும்படி அரசிடம் வலியுறுத்துவோம்.
ஆணைய அறிக்கையை பகிரங்கப்படுத்தினால், ஜாதிகளுக்கு இடையே மோதலுக்கு வழி வகுக்கும். பலர் ஜாதிகளுக்கிடையே தீ மூட்டுவர். வீட்டில் அமர்ந்து அறிக்கை தயாரித்துள்ளனர். முதல்வர் சித்தராமையா, எங்கள் பேச்சை கேட்பதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
என்னை சந்திக்க வரவில்லை
அனைவரிடமும் சென்று ஆய்வு நடத்தியதாக கூறுகின்றனர். ஆனால் என்னிடம் ஆய்வுக்கு யாரும் வரவில்லை. ஜாதி கணக்கெடுப்பு விஷயத்தில், என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தெரியவில்லை. அறிக்கைக்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது. ஏனென்றால் ஜாதி அடிப்படையில், சலுகைகள் அளிக்க வேண்டி வரும். ஆனால் விவேகமற்ற அறிக்கை என, பலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். யாரை சந்தித்தார்களோ, இல்லையோ என்பது தெரியவில்லை. என்னை சந்திக்க வரவில்லை.
– சித்தலிங்க சுவாமிகள்,
துமகூரு சித்தகங்கா மடாதிபதி
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்