சமீபத்தில் வெளியான மலையாளப் படமான `மஞ்சும்மல் பாய்ஸ்’ கேரளா மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. சென்னை உட்பட பெருநகரங்களில் பல திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்ட நிலையில், இதுவரை மலையாளப் படங்கள் பெரிதும் வெளியாகாத தென் தமிழகத்தின் பல இடங்களிலும் இந்தப் படம் திரையிடப்பட்டு வருகிறது.
படத்தில் இடம்பெற்றுள்ள தமிழ் வசனங்களை எழுதியிருப்பவர் சி.கிளைட்டன் சின்னப்பா. விஷ்ணு விஷாலின் ‘குள்ளநரி கூட்டம்’ உட்பட சில படங்களின் ரைட்டர் இவர்தான். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் போலீஸ் ரைட்டராகவும் நடித்திருக்கும் கிளைட்டனிடம் படத்தின் வெற்றி குறித்துப் பேசினோம்.

“‘மஞ்சும்மல் பாய்ஸ்’ டீமின் உழைப்பை நேர்ல பார்த்துருக்கேன். அவ்ளோ பிரமிப்பா இருக்கும். எல்லாருமே நண்பர்கள்ங்கறதால, அத்தனை பேருமே சின்ஸியரா, முழு ஒத்துழைப்போட கடினமா உழைச்சிருக்காங்க. இந்தப் படத்தின் தமிழ் நடிகர்களின் ஒருங்கிணைப்பை எனது நண்பரும் நடிகருமான ராமச்சந்திரன்தான் செய்திருந்தார். சாலிகிராமத்தில் ஆடிஷன் நடக்குதுனு அவர் என்கிட்ட சொன்னதும் நானும் நடிக்க வர்றேன்னு சொல்லி ராமசந்திரனோடு போனேன். படத்தின் ஆடிஷன்ல நான் யார்ன்னு விசாரிச்சாங்க. அதில் நான் ‘குள்ளநரி கூட்டம்’ படத்தின் ரைட்டர் என்றதும் அவங்களுக்கு ஆச்சரியம்.
‘படத்தில் வரும் தமிழ் வசனங்களையும் நீங்களே எழுதுங்கன்னு இயக்குநர் சிதம்பரம் சொன்னதோடு எனக்கு போலீஸ் ரைட்டர் கதாபாத்திரமும் கொடுத்தார். அந்த போலீஸ் ஸ்டேஷனிலிருக்கும் நல்ல போலீஸா நான் நடிச்சிருக்கேன்.

படப்பிடிப்பில் நான்கு நாட்கள் இருந்தேன். நம்ம ஊருல ஷூட்டிங் ஸ்பாட்டுனா அவ்ளோ சத்தம் கேட்கும். ஒரு இடத்துல படப்பிடிப்பு நடக்குதுனுனா பல கிலோ மீட்டர் தூரத்திலிருந்தே, அந்த சத்தத்தை வச்சு, அங்க ஷூட்டிங்ன்னு சொல்லமுடியும். ஆனால், ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படப்பிடிப்பில் பின் ட்ராப் சைலன்ஸ்தான். ஒரு சத்தம் கேட்காது. நம்ம ஊர்ல இயக்குநர்கள் பக்கத்துல அவரோட உதவி இயக்குநர்களே அவர்கிட்டப் போய்ப் பேச அவ்ளோ பயப்படுவாங்க… ஆனா, இந்த யூனிட்ல அப்படியில்ல. எல்லாருமே சகஜமா பழகுறாங்க, பேசுறாங்க. நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லாருமே நண்பர்கள் என்பதால் அத்தனை பேரும் சிரிச்ச முகமா வேலை செஞ்சாங்க. யாரிடமும் இயக்குநர் ஒரு வார்த்தைகூட அதிர்ந்து பேசி நான் பார்க்கல. ஸ்பாட்டுல அத்தனை பேருமே ஜாலியா பேசிட்டு இருப்பாங்க. ஆனா, அன்னிக்கு எடுக்கத் திட்டமிட்ட அத்தனை காட்சிகளையும் எடுத்து முடிச்சிருப்பாங்க.
யூனிட்ல உள்ள அத்தனை பேரும் குடிக்கறதுக்கு வெந்நீரோ அல்லது டீ, காபியோ எல்லாமே கண்ணாடி டம்ளர்லதான் குடிச்சாங்க. அத்தனை பேருமே டீ, காபி இருக்கற இடத்துக்கு போய்தான் குடிச்சாங்க. ஒரு கண்ணாடி டம்ளர் கூட சேதாரம் ஆகல. கண்ணாடி கிளாஸை அவ்வளவு கவனமா கையாளுவாங்க.
இன்னொரு விஷயம், நம்ம படப்பிடிப்புகளில் மாங்கு மாங்குனு காலையில இருந்து நடு ராத்திரிவரை படப்பிடிப்பு நடக்கும் ஆனா, ரிசல்ட்? ‘நாலு ஷாட் எடுக்காமல் விட்டுட்டோம்’ன்னு ஃபீல் பண்ணுவாங்க. இங்க அந்தப் பிரச்னையே வரலை. அதேபோல, ஒரு நடிகனுக்கு சுதந்திரம் கொடுக்கிறாங்க. சீனையும், சிட்சுவேஷனையும் சொன்ன பிறகு ‘நீங்க நடிக்கறதை நடிங்க’ன்னு சொல்லி அதில் அப்படியே டெவலப் பண்றாங்க. நிறைய டேக்குகள் போனாலும், அந்த நடிகர்களிடம் இயக்குநர் கோபப்படாமல் சொல்லி கொடுக்கிறார்.

போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் எடுக்கும்போது, கொடைக்கானல்ல சீசன் டைம். மழை பெய்யுது. ரொம்ப குளிர். இந்த பசங்க மழையில நனைஞ்சுகிட்டே ஸ்டேஷன் வருவாங்க… அந்த சீன் கன்ட்டினியுட்டி விட்டுப் போயிடக்கூடாதுனு கடும் குளிரையும் பொறுப்படுத்தாமல் தொடர்ந்து நாலு நாட்களுமே உடம்புல தண்ணீரை ஊற்றிக் கொண்டு நடிச்சாங்க. அவங்க உழைப்புக்கு கிடைத்த பரிசுதான் இந்த வெற்றி. நான் அந்த டீம்கிட்ட ‘கொடைக்கானலுக்கு பிக்னிக் வந்த இடத்துல ஒரு படத்தை எடுத்துட்டுப்போறீங்க’னு சொன்னேன். அது வெறும் வார்த்தை இல்லை. அதான் உண்மை” என நெகிழ்ச்சியுடன் முடித்தார் கிளைட்டன்.