யுவராஜ் சிங், பா.ஜ.க சார்பில் தான் போட்டியிடுவதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரராக இருந்தவர் யுவராஜ் சிங். 2011 உலகக்கோப்பையில் ஆல்ரவுண்டராக மிகச் சிறப்பான செயல்பாட்டை அளித்திருந்தார். அந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லப் பிரதான காரணமாக இருந்தவரே அவர்தான். அந்த உலகக்கோப்பையின் தொடர் நாயகன் விருதையும் வென்றிருந்தார். இதன்பிறகுதான், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்தார். இரண்டாம் இன்னிங்ஸில் பெரியளவில் சோபிக்கவில்லை என்றாலும் எல்லோருக்குமான பெரும் நம்பிக்கையாக மாறினார். மெது மெதுவாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை நோக்கி நகர்ந்துவிட்டார்.

இந்நிலையில்தான், அவர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலம் குர்டாஸ்பூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் வேட்பாளராகக் களமிறங்க உள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தச் செய்தி குறித்து ட்வீட் ஒன்றின் மூலம் விளக்கமளித்திருக்கிறார் யுவராஜ் சிங்.
அதில், “ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாகி இருக்கின்றன. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் குர்டாஸ்பூர் தொகுதியில் நான் போட்டியிடவில்லை. பல்வேறு திறமைகளைக் கொண்ட மக்களுக்கு ஆதரவு வழங்குவதிலும், உதவுவதிலும்தான் என்னுடைய ஆர்வம் இருக்கிறது.
Contrary to media reports, I’m not contesting elections from Gurdaspur. My passion lies in supporting and helping people in various capacities, and I will continue to do so through my foundation @YOUWECAN. Let’s continue making a difference together to the best of our abilities❤️
— Yuvraj Singh (@YUVSTRONG12) March 1, 2024
மக்களுக்கு எனது ‘YOU WE CAN’ தொண்டு நிறுவனம் மூலமாகத் தொடர்ந்து உதவிகள் செய்ய விரும்புகிறேன். அனைவரும் இணைந்து நம்மால் முடிந்த மாற்றங்களைச் செய்வோம்” என்று தெரிவித்திருக்கிறார்.