அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிரத்திலிருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். அதைத் தொடர்ந்து நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ஒவ்வொரு முறை நான் சென்னைக்கு வரும்போதும், தமிழர்களால் எனக்கு சக்தி உண்டாகிறது. சில ஆண்டுகளாக நான் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
பா.ஜ.க-வுக்கு தொடர்ந்து மக்கள் ஆதரவு வலுவடைந்து வருவதுதான் அதற்கு காரணம். நான் வளர்ச்சியடைந்த பாரதத்தையும், தமிழ்நாட்டையும் உருவாக்கியிருக்கிறேன். விரைவில் இந்தியாவை உலகின் முதல் மூன்று வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாக கொண்டுவருவேன். அதற்கு தமிழ்நாட்டின் பங்கு மிகப் பெரியது. சென்னையில் நகர்ப்புற கட்டமைப்புக்கான பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி, சென்னை மெட்ரோ, விமான நிலையம் எனப் பல திட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம்.
சென்னை துறைமுகம், மதுரவாயலுக்கும் இடையே இடைவெளியை குறைக்க, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்பட்டுவருகிறது. மத்திய அரசு தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்காக பணியாற்றி வருகிறது. ஆனால் மாநில அரசு சென்னை மக்களின் தேவைகளை கண்டுகொள்ளவே இல்லை. சென்னை வெள்ளம், புயல் வந்தபோது அவதிப்படும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டாமல், வெள்ள மேலாண்மை செய்யாமல் தி.மு.க அரசு ஊடக மேலாண்மை செய்தது.
கொரோனாவின்போது மக்களுக்கான ரேஷன் பொருள்களை மத்திய அரசு வழங்கியதில் மகிழ்ச்சி. கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, அனைவருக்கும் இலவசமாக அது கிடைக்க வேண்டும் என மத்திய அரசு செயல்படுத்தியது. தமிழ்நாட்டுக்கு சிறு குறு நடுத்தர தொழில் மேலாண்மைக்காக ஆயிரக்கணக்கான கோடிகளை பா.ஜ.க அரசு வழங்கியது. மத்திய அரசு தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக கடுமையாக உழைத்து வருகிறது. அதற்காக பல திட்டங்களின் தொகை நேரடியாக பயனாளிகளுக்கே அனுப்பப்படுகிறது.
அதுதான் தி.மு.க-வுக்கு மிகப்பெரிய வருத்தம். இந்த வளர்ச்சித் திட்டங்களின் பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை என்பதுதான் ஒரு குடும்பத்தின் எரிச்சல். பணம்தான் கிடைக்கவில்லை. ஸ்டிக்கராவது ஒட்டிக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். அதிலும் அவர்களுக்கு தோல்விதான் கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கானப் பணத்தை கொள்ளையடிக்க விடமாட்டேன். அந்த பணத்தின் ஒவ்வொரு பைசாவையும் மீட்டு மக்களுக்கு வழங்காமல் விடமாட்டேன். இதுதான் மோடியின் உத்தரவாதம்.
குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள், தங்கள் குடும்பம் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். ஆனால், தேசத்தின் நலனில் அக்கறைக் கொண்ட நான் தேசத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறேன். குடும்ப அரசியல் செய்துகொண்டிருந்தவர்கள் ஆட்சிக்காலத்தில், 18,000 கிராமங்களில் மின்சாரமே இல்லை. இரண்டரைக் கோடி வீடுகளில் இருள் சூழ்ந்திருந்தது. அதை நீக்க நமது அரசு விரைவாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது. கல்பாக்கத்தில் எரிசக்தி துறையில் தற்சார்பு நிலையை அடையும் திசையில், இந்தியா முன்னேற்றத்துக்கான அடியை எடுத்து வைத்திருக்கிறது.
கல்பாக்கத்தில் ஈரணு உலைத் திட்டம் வரலாற்று சிறப்புமிக்க திட்டமாக உருவாகிவருகிறது. இந்த சிறப்புமிக்க திட்டத்தில் மின்சார உற்பத்தி தொடங்கிவிட்டால், உலகின் இந்த ஈரணு உலை மூலம் மின்சார உற்பத்தி செய்யும் இரண்டாவது நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பெற்றுவிடும். இந்தியா எரிசக்தித் துறையில் பல்வேறு முன்னேற்றங்களைச் சாதித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் மின்சக்தித்துறை வளர்ச்சிக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. ஒருகோடி குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் ‘பிஎம் சூர்ய கர்’ திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.
அந்த கருவியை உங்கள் வீட்டில் பொருத்தினால் மின்சார கட்டணம் ஜீரோவாக இருக்கும். உபரி மின்சாரத்தை அரசே வாங்கிக்கொள்ளும். இந்த திட்டத்துக்காக ரூ.75,000 கோடி செலவிடப்படவிருக்கிறது. காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் குடும்பத்துக்கே முதல் உரிமை எனக் கூறுகிறார்கள். ஆனால் எனக்கு எப்போதும் இந்த நாடே முதல் உரிமை. எனக்கு குடும்பம் இல்லை என்கிறார்கள். நான் 16 வயதில் இந்த தேசத்துக்காக வீட்டைவிட்டு வெளியேறினேன். என் தேசம்தான் என் குடும்பம். அதற்காகதான் இரவு பகலாக வேலை செய்து என்னை அர்பணித்துக்கொண்டிருக்கிறேன்.
என் நாடுதான் என் குடும்பம். காங்கிரஸ், தி.மு.க-வின் குடும்ப அரசியல் செய்பவர்களுக்கு ஊழல், லஞ்சம் தவிர வேறு எதுவும் தெரியாது. இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு தூய்மையான அரசியலுக்கு வித்திட்டிருக்கிறது. குடும்ப அரசியல் செய்பவர் அதிகாரத்தை அடையும் போது, மக்களை அடிமையாகத்தான் நினைக்கிறார். மக்களின் மனதை புரிந்துகொள்ளாதவர்கள்தான் இன்னும் அரசியலில் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் தங்குதடையின்றி கிடைக்கிறது என்ற செய்தி என் மனதை வருத்துகிறது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கட்சியை கவனமாக தேர்ந்தெடுங்கள். பா.ஜ.க-வை தேர்ந்தெடுத்தால் போதைப்பொருளை ஒழிப்பதற்கான வேலையை பா.ஜ.க தீவிரமாக முன்னெடுக்கும். இதுதான் மோடியின் உத்தரவாதம்” எனப் பேசினார்.