லெஜண்ட் சரவணன் முதலில் விளம்பரப் படங்களில்தான் நடித்துக் கொண்டிருந்தார். அதற்கே முதலில் சரவணன் ஒப்புக்கொள்ளவே இல்லை.
எனக்குத் திரையில் தோன்றும் அளவுக்குத் தைரியம் கிடையாது என்று மறுத்துக் கொண்டே வந்தார். இயக்குநர்கள் ஜே.டி – ஜெர்ரிதான் அவருக்குத் தைரியம் ஊட்டி விளம்பரப் படத்திற்குள் அவரைக் கொண்டு வந்தார்கள். மக்கள் அவரை ஆச்சர்யமாகப் பார்த்தபோது அவரே உற்சாகமாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/12/ls.jpg)
20 விளம்பரப் படங்களுக்கு மேல் நடித்ததில் சரவணனுக்கு ஒரு சினிமாவில் கௌரவ வேடத்தில் நடித்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியிருக்கிறது. அதை ஜே.டி – ஜெர்ரியிடம் வெளிப்படுத்திய போது அவர்கள் அவரை ஹீரோவாகவே பார்த்தார்கள். விளைவு, நிறைய யோசனைக்குப் பிறகு ‘லெஜண்ட்’ படத்திற்கு ஓகே சொல்லிவிட்டார் சரவணன். படம் வெளியாகி மக்களின் கவனம் பெற்றாலும், லாபம் பார்க்கவில்லை என்பதே உண்மை.
அவ்வப்போது புது புது போட்டோ ஷூட் ஸ்டில்களை வெளியிட்டு வந்தாலும் நெடுநாள்களாக அமைதியாகவே இருந்தார் சரவணன். விரைவில் அடுத்த படம் என்று மட்டும் சொல்லி வந்தனர். இந்நிலையில்தான் அவர் இப்போது மீண்டும் ஹீரோவாகத் திரும்பி வருவது உறுதியாகியிருக்கிறது. இந்த முறை அவரை இயக்குபவர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார். இதற்கு முன்னால் ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’ படங்களை இயக்கி இருப்பவர். சூரி, சசிகுமார் நடிப்பில் அவரின் ‘கருடன்’ படம் இப்போது ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/03/GHqpAxla0AAZ9YO.jpg)
செந்தில்குமார் சொன்ன கதை லெஜண்ட் சரவணனுக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. இதற்கு முன் எவ்வளவோ கதைகளைக் கேட்டிருந்தாலும் இந்தக் கதையைத்தான் அவர் மனதுக்கு நெருக்கமாக உணர்ந்தாராம். அதனால் கதையை ஓகே செய்து, செந்தில்குமாரையும் ஒப்பந்தம் செய்துவிட்டார்.
ஸ்கிரிப்ட் ரெடியாம். அடுத்துப் படத்தின் பெயரோடு முதல் அறிவிப்பு சீக்கிரம் வெளியாகவிருக்கிறது. மே மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்புக்குக் கிளம்புகிறார்கள். கதாநாயகி, இன்னும் பிற தகவல்களை அடுத்தடுத்து வெளியாகின்றன.