குவாலியர் : மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவதாக அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்து விட்ட நிலையில், அக்கட்சியுடன் பேச்சு நடந்து கொண்டிருப்பதாகவும், கூட்டணிக்கான கதவுகள் திறந்தே உள்ளதாகவும், காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இழுபறி
மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கும், பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசை வீழ்த்த, காங்., – தி.மு.க., – ஆம் ஆத்மி – திரிணமுல் காங்., உள்ளிட்ட கட்சிகள் இணைந்து, ‘இண்டியா’ என்ற கூட்டணியை அமைத்துள்ளன.
எனினும் இக்கூட்டணி கட்சிகளிடையே மோதல் நீடிப்பதால், சில மாநிலங்களில் தொகுதி பங்கீடு இறுதியாவதில் இழுபறி நீடிக்கிறது. மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவதாக, அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி பல முறை கூறி விட்டார்.
இதே போல், பஞ்சாபில் தனித்து போட்டியிடுவதாக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி தெரிவித்து விட்டது.
தமிழகத்தில், ஆளும் தி.மு.க., – காங்., இடையே தொகுதி பங்கீடு இறுதியாவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், காங்., பொதுச்செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறியதாவது:
இண்டியா கூட்டணியின் ஓர் அங்கமாகவே தொடர்வதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதன்படி, பா.ஜ.,வை வீழ்த்துவதே அவரது நோக்கம் என்பது தெரிகிறது.
மீண்டும் போட்டி
மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவதாக மம்தா பானர்ஜி அறிவித்தது ஒருதலைபட்சமானது. எங்களை பொறுத்தவரை, திரிணமுல் காங்கிரசுடன் இன்னும் பேச்சு நடந்து வருகிறது. கூட்டணிக்கான கதவுகள் திறந்தபடி தான் உள்ளன.
கேரளாவின் வயநாடு தொகுதியில், ராகுல் மீண்டும் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. எனினும் இதில் அவரே முடிவெடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்