தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன்கள் உரிய முறையில் மக்களைச் சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்யும் வகையில், `நீங்கள் நலமா?’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்திருக்கிறார். இந்தத் திட்டத்தில், அமைச்சர்கள், அந்தந்த துறை சார்ந்த உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் மக்களிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிவர்.
இந்த நிலையில், நீங்கள் நலமா திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கும் ஸ்டாலின், தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய நிதியை நேரடியாக மக்களிடம் நேரடி வழங்குவதாகப் பிரதமர் மோடி அப்பட்டமான பொய்யுரைத்திருப்பதாக விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து அறிக்கையில், “தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நாள்தோறும் பார்த்துப் பார்த்து எத்தனையோ முத்திரைத் திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். அப்படியொரு திட்டம்தான் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள ‘நீங்கள் நலமா?’ என்ற புதிய திட்டம். மக்கள் நல்வாழ்வுக்காக வகுக்கப்படும் திட்டங்களின் பயன்கள் உங்களுக்கு வந்து சேர்வதை உறுதி செய்வதற்காக இந்த `நீங்கள் நலமா’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறேன்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் 1,15,16,292 மகளிர் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத் தொகையாகப் பெறுகிறார்கள். விடியல் பயணத் திட்டம் மூலம் மகளிர் 445 கோடி முறை பயணித்து, மாதம் ரூ.888 வரை சேமித்துப்பயனடைகின்றனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் ஒரு கோடி பேர் இதுவரை பயனடைந்திருக்கின்றனர். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் நாள்தோறும் 16 லட்சம் மாணவர்கள் வயிறார காலைச் சிற்றுண்டி உண்கிறார்கள். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரிலான `புதுமைப்பெண்’ திட்டத்தின் பயனாக ரூ.4,81,075 மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று பட்டதாரிகளாக உருவாகப் போகிறார்கள்.
இப்படி, தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வெற்றி கண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. எங்களைச் சிலர் குடும்ப ஆட்சி என்று சொல்கிறார்கள். ஆம் இது குடும்ப ஆட்சிதான். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் கை தூக்கிவிடும் ஆட்சி இது. தற்போது, நீங்கள் நலமா திட்டத்தைச் செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வலைத்தளத்தை நான் இன்று தொடங்கி வைத்தேன். இந்தத் திட்டத்தில், அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரும் மக்களுடன் கலந்துரையாடி நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்துக் கருத்துகளைப் பெற்று, அதனடிப்படையில் அரசின் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் உருவாக்கப்படும். அதேசமயம், ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையால் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி உதவிகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருவதை நான் அதிகம் விளக்கத் தேவையில்லை.
சில நாட்களுக்கு முன்னால் சென்னைக்கு வந்து பேசிய மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள், மாநில அரசுக்குத் தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லி விட்டுச் சென்றுள்ளார்கள். எந்த மக்களுக்குக் கொடுத்தார் என்பதைச் சொல்லியிருந்தால் அந்த மக்களுக்குக் கிடைத்ததா என்று கேட்கலாம். இரண்டு மாபெரும் இயற்கை பேரிடரை எட்டு மாவட்டத்து மக்கள் சந்தித்தார்கள். இதற்காக 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டோம். அதற்கு 1 ரூபாயையாவது ஒதுக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு உதவி செய்தாரா பிரதமர்… இப்படியா பொய்களைச் சொல்வது…
ஒன்றிய அரசிடமிருந்து நிதி வரவில்லை என்றாலும் இந்த எட்டு மாவட்டத்துக்கு மக்களுக்காக, மாநிலப் பேரிடர் நிதி மற்றும் அரசுத் துறைகளிலிருந்து 3,406.77 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கியும், நிவாரணப் பணிகளைச் செய்தும் மக்கள் நலம் காத்து வருகிறது நம் அரசு. உங்கள் ஒவ்வொருவர் நலமே எனது நலம். அந்த நலனைக் காக்கவே நான் உழைக்கிறேன் என்பதன் மற்றுமோர் அடையாளமாகத்தான் இந்த ‘நீங்கள் நலமா’ திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளேன். உங்கள் அரசு என்றும் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கும் என்று உறுதி அளிக்கின்றேன்” என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
இன்னொருபக்கம், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “”நீங்கள் நலமா” என்று கேட்கும் ஸ்டாலின் அவர்களே, நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு! சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு! சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு! விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு!
எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு! இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் விடியா ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை!” என்று வீமர்சித்து `#நாங்கநலமாஇல்லை_ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்திருகிறார்.