சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “நீங்கள் நலமா” திட்டத்தை தொடங்கிவைத்து நலத்திட்ட உதவிகளைப் பெற்ற பயனாளிகளிடம் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது, “தோழி” விடுதிகளை பெண்கள் பயன்பெறும் வகையில் ஒரு நல்வாழ்வு மகத்துவ மையமாக மாற்ற வேண்டும் என்று பயனாளி ஒருவர் வைத்து கோரிக்கையை ஏற்று உடனடியாக ஆவன செய்வதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வரின் முகவரி துறையின் கீழ், பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களைக் கேட்டறியும் புதுமையான திட்டமான “நீங்கள் நலமா” என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 6) முகாம் அலுவலகத்திலிருந்து தொடங்கி வைத்தார். பின்னர், பயனாளிகளிடம் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார்.
தமிழக மக்களின் நலன் கருதி, அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய காலத்தில் பொதுமக்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டியது ஒவ்வொரு அலுவலரின் பொறுப்பாகும் என்பதை எப்போதும் வலியுறுத்தி வருகிறார்.
அவ்வகையில், தமிழக அரசு ஏழை எளிய விளிம்புநிலை பொதுமக்கள் பயனடைந்திட, “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்”, “புதுமைப் பெண் திட்டம்”, “நான் முதல்வன் திட்டம்”, “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்”, “விடியல் பயணம் திட்டம்”, “தோழி” தங்கும் விடுதிகள், போன்ற பல்வேறு திட்டங்கள் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பின்னூட்டங்களைப் பெற நடவடிக்கை: இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் உரியவர்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்யும் நோக்குடன், மக்கள் மற்றும் அரசுக்கிடையேயான இடைவெளியைக் குறைத்திடும் வகையில் மக்களின் கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களைப் பெறும், “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்று மயிலாடுதுறையில் மார்ச் 4-ம் தேதி நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வர் அறிவித்தார்.
இத்திட்டம் முதல்வரின் முகவரித்துறையால் செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக அரசுத் துறைகளின் செயல்பாட்டில் உள்ள முக்கியமான நலத் திட்டங்களில் பயன்பெற்ற பயனாளிகளிடமிருந்து கருத்துகள் மற்றும் பின்னூட்டம் பெறப்படும். அதனடிப்படையில், நலத்திட்டங்களின் பயன்கள் மக்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், அரசு வழங்கிடும் சேவைகளின் தரத்தினை மேம்படுத்த வழிவகைகள் மேற்கொள்ளப்படும். அதன் அடுத்தகட்டமாக பொதுமக்களுக்கு அரசுத் துறைகளால் வழங்கப்படும் இதர சேவைகளின் மீதும் கருத்துகள் மற்றும் பின்னூட்டங்கள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் பின்னூட்டங்கள் இதற்கென உருவாக்கப்படும் “நீங்கள் நலமா“ வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வலைத்தளம் மக்களின் கருத்துகளைப் பெறும் ஒரு திறந்தவெளி அமைப்பாகச் செயல்படும். மேலும், இவ்வலைத்தளத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசுத் திட்டங்கள் குறித்த விவரத் தொகுப்பு பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும்.
“நீங்கள் நலமா” என்ற புதியதொரு திட்டத்தை தமிழக முதல்வர் இன்றையதினம் தொடங்கி வைத்து, “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்” பயன்பெற்ற சிவகங்கை மாவட்டம், நெற்குப்பையைச் சேர்ந்த தனலட்சுமியை முதல்வர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனலட்சுமி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் தொகை தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்து, முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து, “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில்” பயன்பெற்று வரும் திருவள்ளூர், சோரஞ்சேரி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் பவனேஷின் தந்தை பிரபுவிடம் முதல்வர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அச்சிறுவனின் தந்தை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளது என்றும், பள்ளிக்கு செல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதோடு தனது மகன் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மகனுக்கு காலை உணவு தயார் வேண்டிய நிலை இல்லாத காரணத்தால் எனது மனைவியும் தற்போது பணிக்கு செல்கிறார் என்று முதல்வரிடம் தெரிவித்தார்.
“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், UPSC போட்டித் தேர்வுக்கான நேர்முக தேர்வு பயிற்சி பெற்று வரும் செங்கல்பட்டு மாவட்டம், மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த கதிரவனை முதல்வர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கதிராவன், 2019-ஆம் ஆண்டு BE Civil Engineering முடித்து, குடிமைப்பணி தேர்வுக்காக படித்து கொண்டு வருவதாகவும், தற்போது UPSC (Main Exam) முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று, அடுத்ததாக நேர்முகத் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை பெற்று வருவதால் கவலையின்றி படித்து வருவதாகவும், இத்திட்டத்தினை கிராமப்புற மாணவர்களும் அறிந்து கொண்டு, அதிகளவில் பயன்பெற வேண்டும் என்பது தனது விருப்பம் என்றும் முதல்வரிடம் தெரிவித்தார்.
“புதுமைப் பெண்” திட்டத்தின் கீழ் பயன்பெற்ற செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி செல்வி நஸ்ரினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதல்வர் பேசினார். அப்போது, மாணவி நஸ்ரின், தற்போது தான் ராஜேஸ்வரி கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் BA (ஆங்கிலம்) இரண்டாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வருவதாகவும், புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு தனது படிப்புக்கு தேவையான செலவுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பணிபுரியும் மகளிருக்கான விடுதி திட்டமான “தோழி” திட்டத்தின் கீழ் அடையார் தோழி விடுதியில் தங்கி பயன்பெற்று வரும் சீர்காழியைச் சேர்ந்த ஸ்வாதி முரளியை, முதல்வர்
தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஸ்வாதி முரளி, தங்கும் விடுதி ஆரோக்கியமானதாகவும், சுகாதாரமாகவும் இருப்பதாகவும், விடுதி பாதுகாவலர் கனிவோடு அனைவரையும் நடத்துவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தனியார் மகளிர் விடுதியைவிட மிகக் குறைந்த கட்டணத்தில், அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், மிகவும் பாதுகாப்பாக உணர்வதாகவும் தெரிவித்தார்.“தோழி” விடுதிகளை பெண்கள் பயன்பெறும் வகையில் ஒரு நல்வாழ்வு மகத்துவ மையமாக (Wellbeing Centre) மாற்ற முதல்வரிடம் ஸ்வாதி முரளி கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று உடனடியாக ஆவன செய்வதாக முதல்வர் உறுதியளித்தார்.
முதலமைச்சரின் தனிப்பிரிவில் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு மனு சமர்ப்பித்து காவல்துறையின் சிறப்பான செயல்பாடுகளால் பயன்பெற்ற திருத்தணியைச் சேர்ந்த ஜெ.கே. குமாரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதல்வர் பேசினார்.
அப்போது குமார் காணாமல் போன தனது மகள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு சிறுவர் இல்லத்தில் பாதுகாப்பாக சேர்க்கப்பட்டு, பின்னர் தன்னிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார் என்று தெரிவித்தார். முதல்வர் குமாரிடம், மாணவிகளுக்காக அரசு அறிவித்து செயல்படுத்தி வரும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி, மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர்/ முதலமைச்சரின் செயலாளர் நா. முருகானந்தம், முதல்வரின் முகவரித்துறை சிறப்பு அலுவலர் த.மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.