பெங்களூரு: பெங்களூருவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நீரை வீணடிப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகராக விளங்கும் பெங்களூருவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழியாததால் பெங்களூருவுக்கு நீரை வழங்க முடியாமல் மாநகராட்சியின் நீர் விநியோக வாரியம் திணறி வருகிறது. இதனால் டேங்கர் லாரி நீரின் விலைபன்மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பெங்களூரு ஒயிட் ஃபீல்ட்டில் உள்ள தி பாம்மெடோஸ் லே அவுட் குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், ‘‘கடந்த சில வாரங்களாக பெங்களூரு நீர் விநியோகவாரியம் நீர் வழங்கவில்லை. ஆழ்துளை கிணறுகள் வற்றியுள்ளதால் அதன் மூலம் நீர் கிடைப்பதும் சிக்கலாகியுள்ளது. எனவேஆயிரக்கணக்கில் செலவழித்துடேங்கர் லாரி மூலம் நீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நீரை குடியிருப்பு வாசிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நீரை தவறாக பயன்படுத்தினாலோ, வீணடித்தாலோ குடியிருப்புவாசிகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதற்காக நிர்வாகம் தனியாக கண்காணிப்பாளரை நியமனம் செய்துள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.