இஸ்ரேல்: தனிநபர் சராசரி வருவாய் ஓராண்டில் ஒப்பீட்டளவில் 6.1 சதவீதம் உயர்வு

டெல் அவிவ்,

இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது.

எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேலில் ஓராண்டில் தனிநபர் வருவாய் அதிகரித்து உள்ளது.

இதுபற்றி இஸ்ரேல் நாட்டின் மத்திய புள்ளியியல் வாரியம் வெளியிட்டு உள்ள செய்தியில், 2023-ம் ஆண்டில் நாட்டில் தனிநபர் வருவாய், மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.2 லட்சத்து 98 ஆயிரத்து 096 என்ற அளவில் உள்ளது. இது கடந்த 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 6.1 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த 2022-ம் ஆண்டில் இந்த வருவாயானது, ரூ.2 லட்சத்து 79 ஆயிரத்து 051 ஆக இருந்தது.

இதேபோன்று, ஒரு பதவிக்கு நிலையாக நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் ஆனது, மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்து 694 ஆக இருந்தது. இது கடந்த 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 1.9 சதவீதம் அதிகம் ஆகும். இந்த வருவாயானது, 2022-ம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 070 ஆக இருந்தது என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.

இஸ்ரேலில் கடந்த 2023-ம் ஆண்டு சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 39.83 லட்சம் என்ற அளவில் இருந்தது. இதுவே கடந்த 2022-ம் ஆண்டில் 39.44 லட்சம் என்ற அளவில் இருந்தது. முந்தின ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2023-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1 சதவீதம் அதிகரித்து உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.