மிகவும் பாதுகாப்பான முதலீடு என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தங்கத்தின் விலையும், பாதுகாப்பே இல்லாத ரிஸ்க்கான முதலீடு என்று சொல்லப் படும் கிரிப்டோகரன்சிகளின் விலையும் ஒரே நேரத்தில் உச்சத்தை எட்டி, அனைவரையும் வியக்க வைத்துள்ளன.
தங்கம் என்பது அரிதாகக் கிடைக்கும் ஓர் உலோகம். எனவே, இதன் தேவையும் வரவேற்பும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலகில் மோசமான சம்பவம் எது நடந்தாலும், தங்கத்தின் விலை அதிகரித்துவிடுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் தங்கம், 18.31% விலை உயர்ந்துள்ளது.
அதே போல, முக்கியமான கிரிப்டோகரன்சியான பிட்காயினின் மதிப்பு சர்வதேச சந்தையில் தற்போது 66,800 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டுக் காலத்தில் பிட்காயின் 200% லாபம் தந்திருக்கிறது. மற்றொரு கிரிப்டோ கரன்சியான எதீரியத்தின் மதிப்பும் கணிசமாக உயர்ந்து, இந்த ஆண்டில் மட்டும் 65% லாபம் தந்திருக்கிறது!
குறுகிய காலத்தில் அபரிமிதமான லாபம் கிடைத்ததைப் பார்த்து, ‘‘இவற்றில் பணம் போட்டு, லாபம் பார்க்கும் வாய்ப்பை இழந்துவிட்டோம்! இனியாவது இவற்றில் பணம் போடலாமா?’’ எனப் பலரும் யோசிக்கத் தொடங்கி இருக் கிறார்கள். இந்த யோசனை, தங்கத்தைவிட, பிட்காயின் வாங்க நினைப்பவர்களிடம் அதிகமாக இருப்பதால், எச்சரிக்கை மணி அடிக்க வேண்டியது கட்டாயம்!
தங்கம், பிட்காயின் என ஒருவர் எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும், அதில் உள்ள ரிஸ்க்கை நன்கு அறிந்து, அந்த ரிஸ்க்கை நம்மால் தாங்கிக்கொள்ள முடியுமா என்று யோசித்தே முதலீடு செய்ய வேண்டும். தங்கம், பாதுகாப்பான முதலீடுதான். ஆனால், நீண்ட காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் அதில் கிடைக்க வாய்ப்பில்லை என்பது அதில் இருக்கும் பெரிய ரிஸ்க். கிரிப்டோ கரன்சிகள் என்பவை எந்த வகையான அடிப்படையும் இல்லாதவை. அவற்றின் மதிப்பு குறுகிய காலத்தில் மிகவும் குறையும் அல்லது அதிகரிக்கும் ரிஸ்க் உள்ளது.
ஆக, நம்மிடம் இருக்கும் மொத்தப் பணத்தையும் இந்த இரண்டிலோ, ஏதாவது ஒன்றிலோ முதலீடு செய்யாமல், தங்கத்தில் 10%, கிரிப்டோவில் 2% மட்டும் முதலீடு செய்வதே சரி. மீதமுள்ள பணத்தை நாம் அடைய நினைக்கும் இலக்குகளை நிறைவேற்றுகிற மாதிரியான முதலீடுகளில் அஸெட் அலொகேஷன் அடிப்படையில் முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டி நல்ல லாபத்தைப் பார்ப்பதுடன் ரிஸ்க்கையும் எளிதாக சமாளிக்க முடியும்!
எந்த முதலீடாக இருந்தாலும், எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று மட்டும் பார்க்காமல், என்னென்ன ரிஸ்க்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் பார்த்து முதலீடு செய்வதே புத்திசாலித்தனம்!
– ஆசிரியர்