புதுடெல்லி: செங்கடல் மற்றம் ஏடன் வளைகுடா பகுதியில் செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து ஹவுதி தீவிரவாதிகள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசா மீதான தாக்கு தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. கடந்த சில வாரங்களில், தாக்குதலுக்கு உள் ளான பல வணிக கப்பல்களுக்கு இந்திய கடற்படை உதவியது.
இந்நிலையில் ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று முன்தினம் பர்படாஸ் நாட்டுக்கு சொந்தமான எம்.வி.ட்ரூ என்ற வணிக கப்பல் சென்றது. அதன் மீது டிரோன் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த கப்பல் தீப்பற்றியது. இதில் ஊழியர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த தாக்குதலையடுத்து, இந்திய கடற்படையின் உதவி நாடப்பட்டது. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஐஎன்எஸ் கொல்கத்தா என்ற போர்க்கப்பல் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்தது. வணிக கப்பலில் இருந்த ஒரு இந்தியர் உட்பட 21 ஊழியர்கள் மீட்கப்பட்டதாககடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மாத்வெல் தெரிவித்தார்.