ஸ்ரீநகர் :காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின், முதல்முறையாக நேற்று அங்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ”காஷ்மீர் இப்போது சுதந்திரக் காற்றை சுவாசிப்பதால் வளர்ச்சியில் புதிய உயரங்களை தொட்டு வருகிறது,” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ல் ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
ரூ.5,000 கோடி திட்டம்
வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வுக்கு பின், பிரதமர் மோடி நேற்று காஷ்மீருக்கு முதல்முறையாக வருகை தந்தார். மாநிலத்தின் சுற்றுலா, வேளாண் பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்ட 5,000 கோடி ரூபாய்க்கான திட்டங்களை துவக்கி வைத்தார். இதில் சுற்றுலா வளர்ச்சி திட்டங்களுக்கு மட்டும் 1,400 கோடி ரூபாய் செலவிடப்படும். அரசுப் பணியில் நியமிக்கப்பட்டுள்ள 1,000 பேருக்கான பணி நியமன ஆணையை பிரதமர் வழங்கினார். மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பயனாளர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருடன் கலந்துரையாடினார்.
ஸ்ரீநகரில் பக் ஷி மைதானத்தில், ‘வளர்ந்த இந்தியா; வளர்ந்த ஜம்மு – காஷ்மீர்’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது:இன்று துவங்கப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்கள் காஷ்மீரின் வளர்ச்சியை வேகப்படுத்தும். இது வெறும் யூனியன் பிரதேசம் மட்டுமல்ல; இந்த தேசத்தின் சிரம். பாரதத்தின் கிரீடம் போல இது அமைந்துள்ளது.
தடை உடைந்தது
தலை எப்போதும் நிமிர்ந்து இருப்பது வளர்ச்சி மற்றும் மரியாதையின் அடையாளம். எனவே தான் ஜம்மு – காஷ்மீரின் வளர்ச்சி, பாரதத்தின் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.’சலோ இந்தியா’ திட்டத்தின் கீழ், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் குடும்பத்தில் இருந்து ஐந்து பேரை காஷ்மீருக்கு சுற்றுலா அனுப்பி வைக்க வேண்டும். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், இங்கிருந்த தடைகள் உடைத்து எறியப்பட்டுள்ளன. சுதந்திர காற்றை சுவாசிப்பதால் வளர்ச்சியில் புதிய உயரங்களை எட்டி வருகிறோம்.
உங்கள் இதயங்களை வெல்வதற்காக நான் தொடர்ந்து உழைத்து வருகிறேன். உங்கள் இதயங்களை வெல்வதற்கான என் முயற்சி தொடரும்.சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து இப்பகுதி மக்களை மட்டுமின்றி, இந்த நாட்டையே காங்கிரஸ் கட்சி தவறாக வழிநடத்தி வருகிறது. அதற்கு நீங்கள் இரையாக கூடாது. அனைவருக்கும் மஹா சிவராத்திரி மற்றும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள். இவ்வாறு மோடி பேசினார்.
மோடியின் காஷ்மீர் நண்பர்
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோரை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். தேனீ வளர்ப்பில் சாதனை புரிந்த நசிம் நசீர் என்ற இளைஞர், பிரதமருடன் ‘செல்பி’ எடுத்துக் கொள்ள விரும்புவதாக சொன்னார்.உடனே சம்மதம் தெரிவித்த மோடி, அந்த படத்தை தன் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து, ‘நண்பர் நசிமுடன் எடுத்துக் கொண்ட இந்த செல்பி, எப்போதும் நினைவில் இருக்கும். அவரது சிறப்பான பணி என்னை கவர்ந்தது. அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு என் வாழ்த்துகள்’ என குறிப்பிட்டுள்ளார்.
நசிமுடன் பேசும்போது, ”பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி மாதிரி நீங்கள் செய்து வருவது, இனிப்பு புரட்சி,” என பிரதமர் பாராட்டினார். பொழுதுபோக்காக இரண்டு பெட்டிகளில் தேனீ வளர்ப்பை துவங்கிய நசிம் நசீர், இன்று 2,000 பெட்டிகளில் தேனீ வளர்க்கிறார். அவரிடம் 100 இளைஞர்கள் பணியாற்றுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்