Mumbai Indians: சூர்யகுமார் யாதவிற்கு மாற்று? – இந்த 2 பேருக்கு அதிக வாய்ப்பு – ஏன் தெரியுமா?

Replacement For Suryakumar Yadav In Mumbai Indians: 17ஆவது ஐபிஎல் சீசன் (IPL 2024) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமான தொடக்க விழாவோடு நாளை மறுதினம் தொடங்க உள்ளது. தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் (CSK vs RCB) மோத உள்ளது. இந்த முறை சாம்பியன் பட்டத்தை எதிர்நோக்கி சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி மட்டுமின்றி கொல்கத்தா, குஜராத், ராஜஸ்தான், லக்னோ ஏன் ஹைதராபாத் என அனைத்து அணிகளுமே பெரும் பலத்துடன் காணப்படுகின்றன.   

தொடர்ந்து, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) தனது முதல் போட்டியில் கடந்த வருடம் இரண்டாம் இடம் பிடித்த குஜராத் அணியுடன் மோத உள்ளது. இந்த போட்டி வரும் மார்ச் 24ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் மும்பை – குஜராத் போட்டியை குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கே – ஆர்சிபி போட்டிக்கு அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி இதுதான்.

சூர்யகுமாரின் உடற்தகுதி?

ஏனென்றால், குஜராத் அணிக்கு கடந்த இரண்டு வருடங்களாக கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், தற்போது குஜராத் அணியின் கேப்டனாக சுப்மான் கில் செயல்பட உள்ளார். எனவே, ஹர்திக் பாண்டியா vs சுப்மான் கில் மோதலை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். மேலும், பாண்டியாவின் கேப்டன்ஸியில் ரோஹித் எவ்வாறு செயல்படுகிறார் என்பதையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இவை ஒருபுறம் இருக்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த சில நாள்களாகவே துரதிருஷ்டவசமான தகவல்களே வெளியாகி வருகின்றன. அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் காயத்தால் தொடரில் இருந்து விலக அவருக்கு பதில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் லுக் வுட் சேர்க்கப்பட்டார். அந்த வகையில், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் சூர்யகுாமர் யாதவ் 100% உடற்தகுதியை பெறவில்லை என சான்றளித்துள்ளதால் அவர் ஐபிஎல் தொடரின் முதற்கட்ட போட்டிகளில் விளையாடுவது குறித்த சந்தேகம் எழுந்தது. 

இந்த இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு

இதையொட்டி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதய நொறுங்கிய எமோஜியை ஸ்டோரியாக வைத்திருந்ததால் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது சிரமம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில், சூர்யகுமார் ஐபிஎல் தொடரில் விளையாடாதபட்சத்தில் அவருக்கு பதில் எந்த வீரரை மும்பை இந்தியன்ஸ் மாற்று வீரராக அறிவிக்கும் என்பதும் பலரின் மனதில் கேள்வியாக எழுந்தது. 

Suryakumar Yadav’s Instagram story. pic.twitter.com/2M7ZGBhTDN

— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 19, 2024

அந்த வகையில், சூர்யகுமாருக்கு மாற்று வீரராக இந்த இரண்டு இந்திய சகோதரர்களில் ஒருவரை மும்பை இந்தியன்ஸ் அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது, சர்ஃபராஸ் கான் அல்லது முஷீர் கான் ஆகியோரில் ஒருவரை மும்பை இந்தியன்ஸ் தேர்வு செய்யலாம் என கூறப்படுகிறது. அதற்கான பின்னணி காரணங்களை இதில் காணலாம். 

சர்ஃபராஸ் கான்

சர்ஃபராஸ் கான் (Sarfaraz Khan) நடந்து முடிந்த ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. கடந்த முறை டெல்லிக்கு விளையாடி வந்த நிலையில், அவர் ஏலத்திற்காக விடுவிக்கப்பட்டார். இதற்கு முன்னர் அவர் பெங்களூரு உள்ளிட்ட சில ஐபிஎல் அணிகளில் விளையாடியிருந்தாலும் அவர் தொடர்ச்சியான ஆட்டத்தை டி20இல் வெளிப்படுத்தாத காரணத்தால் அவரை அணிகள் தக்கவைத்துக்கொள்ளவில்லை. இருப்பினும், தற்போது இந்திய டெஸ்ட் அணியில் சேர்ந்து நல்ல ஸ்கோரை அடித்திருந்த நிலையில், சர்ஃபராஸ் கானுக்கு மும்பை அணி ஒரு வாய்ப்பை வழங்கலாம் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக, சூர்யகுமாரை போன்று அனைத்து திசைகளிலும் ஷாட் அடிக்கக் கூடியவர் சர்ஃபராஸ்…

முஷீர் கான்

U19 உலகக்கோப்பை, ரஞ்சி டிராபி என முஷீர் கானுக்கு (Musheer Khan) இது ஒரு சிறந்த சீசனாக அமைந்துள்ளது. 19 வயதான முஷீர் கானை கடந்த டிசம்பரில் நடைபெற்ற டி20இல் எந்த அணியும் எடுக்கவில்லை. உலகக் கோப்பை, ரஞ்சி என இரண்டு தொடர்களிலும் மிரட்டலான சதங்களை அடித்த முஷீர் கான், சூர்யகுமார் யாதவின் இடத்திற்கும் சரியாக இருப்பார். மிடில் ஆர்டரில் கச்சிதமாக பொருந்தும் முஷீர் சுழல், வேகப்பந்துவீச்சு இரண்டையும் சமாளிக்கக்கூடியவர் ஆவார். மும்பை அணி முஷீர் மேல் பணத்தை போடவும் அதிக வாய்ப்புள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.