“எங்களிடம் சூப்பரும் இல்லை, நிழலும் இல்லை, ஒரே ஒரு முதல்வர் தான். அதுவும் வலிமையான முதல்வர். உங்களை போல் நான், பலவீனமானவன் அல்ல,” என, பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சித்தராமையா விமர்சனம் செய்துள்ளார்.
‘கர்நாடக காங்கிரஸ் அரசில், ஒரு முதல்வர் உள்ளார். அவருக்கு இணையாக வருங்கால முதல்வர், சூப்பர் முதல்வர், நிழல் முதல்வர் என, பல முதல்வர்கள் உள்ளனர்.
‘இவர்கள் கொள்ளை அடிக்கும் பணத்தை வாங்கிச் செல்ல, டில்லியில் இருந்து ‘கலெக் ஷன் மினிஸ்டர்’ ஒருவர் வருகிறார்’ என, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் ஷிவமொகா பா.ஜ., பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மீது குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முதல்வர் சித்தராமையா நேற்று வெளியிட்ட அறிக்கை:
பிரதமர் மோடி அவர்களே, காங்கிரஸ் கட்சியில் சூப்பர் முதல்வர்கள், நிழல் முதல்வர்கள் இருப்பதாக ஷிவமொகாவில் நடந்த பா.ஜ., கட்சி கூட்டத்தில் கேலி செய்தீர்கள்.
எடியூரப்பா கிளர்ச்சி
எங்களிடம் சூப்பரும் இல்லை, நிழலும் இல்லை, ஒரே ஒரு முதல்வர் தான். அதுவும் வலிமையான முதல்வர். உங்களை போல் நான், பலவீனமான பிரதமர் அல்ல.
உங்களை நீங்களே, 56 அங்குல மார்பு கொண்டவர் என்று வர்ணிக்கிறீர்கள். உங்கள் ஆதரவாளர்கள் உங்களை ‘விஸ்வகுரு’ என்று போற்றுகின்றனர். ஆனால், நீங்கள் மீண்டும் மீண்டும் பலவீனமான பிரதமர் என்பதை காட்டுகிறீர்கள்.
ஒருமுறை உங்கள் தலைமைக்கு எதிராக, எடியூரப்பா கிளர்ச்சி செய்து, உங்களுக்கு எதிராக பேசினார். அப்படிப்பட்டவர்களின் காலில் விழுந்து, அவர்களை மீண்டும் கட்சிக்கு அழைத்து வந்து ஊர்வலம் நடத்தி, பலவீனமான பிரதமராக காட்டிக் கொள்ளவில்லையா?
கர்நாடகாவில் உங்கள் தலைமைக்கு எதிராக அரை டஜன் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘சீட்’ கிடைக்காமல் உங்கள் கட்சி தலைவர்கள் தெருவில் இறங்கி, ஒருவர் மீது ஒருவர் சேற்றை வீசி போராடுகின்றனர்.
உங்கள் எந்த வேண்டுகோளுக்கும் அவர்கள் செவி சாய்க்கவில்லை. அவர்களில் சிலர், எங்களை தொடர்பு கொள்கின்றனர். ஒழுக்கம் என்று கூறும் கட்சியில் ஒழுக்கமின்மை. இதற்கு காரணம், நீங்கள் பலவீனமான பிரதமர் என்பது அல்லவா?
ஷிவமொகாவில் நீங்கள் கட்சி பிரசாரக் கூட்டம் நடத்தியபோது, கிளர்ச்சி தலைவர் ஈஸ்வரப்பா, குரல் கேட்கும் தொலைவில் உள்ள தனது வீட்டில் இருந்தபோதும், கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
ஈஸ்வரப்பா
இது மட்டுமின்றி பா.ஜ., தலைமைக்கு எதிராக, ஈஸ்வரப்பா தொடர்ந்து துாண்டிவிட்டு வந்தார்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நீங்கள், பலவீனமான பிரதமர் தவிர, வேறு என்ன?
ஜனநாயக கட்சியான எங்களிடம், முதல்வர் பதவிக்கு தகுதியானவர்கள் பலர் உள்ளனர்.
உங்கள் கட்சியின் கதை என்ன? உலகிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாகக் கூறும் உங்கள் கட்சியில் பிரதமர் ஆகத் தகுதியான ஒரு தலைவர் கூட இல்லையா?
அப்படிப்பட்ட தலைவர்கள் யாராவது இருக்கின்றனரா? உங்கள் நாற்காலியை இழக்க நேரிடும் என்ற பயத்தில், நீங்கள் அத்தகைய தலைவர்களை வளர்க்க அனுமதிப்பதில்லை.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்