காவேரி மருத்துவமனையின் அடுத்த கிளை சென்னை வடபழனியில் திறக்கப்பட்டிருக்கிறது.
சென்னை வடபழனியிலுள்ள ஆற்காடு சாலையில் காவேரி மருத்துவமனையின் புதிய கிளை இன்று திறக்கப்பட்டது. இந்த மருத்துவமனையை திறந்து வைக்க சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றிருந்தார். மருத்துவமனையை திறந்த வைத்த பிறகு மேடையில் ரஜினிகாந்த் உரையாற்றினார்.
அவர், ” நான் கடந்த 25 வருஷமாக எந்தவொரு கல்லூரி, கட்டிட திறப்பு விழாக்கள்லயும் பங்கேற்கல. நான் இப்படியான விழாக்கள்ல கலந்துகிட்டால் அந்த கல்லூரிக்கு நான் பார்ட்னர், என்னோட பங்கு அதுல இருக்குனு சொல்வாங்க. ஒரு விழாகள்ல கலந்துகிட்டால் தொடர்ந்து கூப்பிடுவாங்கனு நான் எந்த விழாக்களிலேயும் பங்கேற்கல. விஜயா மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை, காவேரி மருத்துவமனை, ராமசந்திரா மருத்துவமனை தொடங்கி சிங்கப்பூர் , அமெரிக்காவிலுள்ள மருத்துவமனைக்கெல்லாம் இந்த உடம்பு போயிட்டு வந்திருக்கு. எனக்கு மருத்துவர்கள் மேலயும், செவிலியர்கள் மேலேயும் நல்ல மரியாதை இருக்கு. அவங்களோட உதவியாலயும் முன்னணி தொழில்நுட்ப வசதிகளாலயும்தான் நான் இன்னும் வாழ்ந்துட்டு இருக்கேன். இங்க இருக்கும்போது பழைய நினைவுகளெல்லாம் எனக்கு தோணுது. இங்கு உள் பகுதியிலதான் ஏ.வி.எம் ஸ்டூடியோ இருக்கும். ஒரு முறை ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தோட ஷூட்டிங்கிற்காக இந்த இடத்தை சுத்தம் பண்ணிட்டு ஒரு வீடு இங்க கட்டுனாங்க.
அந்தப் படத்தை அமரர்.விஷு சார் எழுதி இயக்கியிருந்தார். அந்தப் படம் முதலீடு பண்ணின பணத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக வசூல் பண்ணுச்சு. அதுக்கு பிறகு இது ஒரு ராசியான வீடுனு எல்லோரும் நினைச்சாங்க. இதே இடத்துல பல படத்தோட ஷூட்டிங் நடந்திருக்கு. அந்த படமெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டாச்சு. என்னுடைய சில படங்களோட ஷூட்டிங்கும் இதே இடத்துல நடந்திருக்கு. அந்த படமெல்லாம் சூப்பர் ஹிட்டாகியிருக்கு. எல்லோரும் இந்த வீடு ரொம்பவே ராசியானது நினைச்சாங்க. அப்படியான இடத்துலதான் இப்போ இந்த காவேரி மருத்துவமனை திறந்திருக்காங்க. மருத்துவமனைக்கு நோயாளியாக அல்லது நோயாளியை பார்க்கிறதுக்கு வருவாங்க. நான் ஒரு முறை நோயாளியாக ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டேன். அங்க இருக்கும்போது மேஜர் ஆப்ரேஷன் ஒரு நாளைக்குள்ள பண்ணியாகணும்னு சொன்னாங்க.
அதுக்குள்ள என்னுடைய பர்சனல் மருத்துவர் என்னுடைய உடல்நிலையை பத்தி தெரிஞ்சுகிட்டு உடனடியாக வந்து பார்த்தாரு. ‘உங்களுக்கு யாரு ஆப்ரேஷன் பண்ண போறாங்க’னு கேட்டாரு. மருத்துவர் சேகர் ஆப்ரேஷன் பண்ணப்போறாருனு சொன்னேன். உடனடியாக அவர் பாசிடிவ் சிக்னல் கொடுத்து இங்கேயே பண்ண சொன்னார். அடுத்ததாக ஆப்ரேஷன் தியேட்டருக்குள்ள போகிற சமயத்துல ’99 சதவிகிதம் ஆப்ரேஷன் சக்சஸ் ஆகிடும்’னு மருத்துவர் சேகர் சொன்னார். எனக்குள்ள அந்த ஒரு சதவிகிதம் பத்திதான் யோசனை இருந்தது. அனஸ்தீஷியா கொடுக்கிற வரைக்கும் எனக்குள்ள அந்த சிந்தனைதான் முழுமையா ஓடிட்டு இருந்துச்சு. அதுக்கு பிறகு கண் முழிச்சு பார்க்கும்போது ஆப்ரேஷன் சக்சஸ்னு சொன்னாங்க. அங்க வேலை பார்த்த செவிலியர்கள், பணியாட்கள் எல்லோரும் ஒரு பாசிட்டிவிட்டி கொடுத்தாங்க. ஒழுக்கம், நேர்மை, அர்பணிப்பு, கடின உழைப்பு மனிதனுக்கு முக்கியம். இப்படியான விஷயங்கள் ஒரு மனிதன்கிட்ட இருந்தால் அவர் நிச்சயமாக வாழ்க்கைல முன்னேறுவார்.
இந்த நான்கு முக்கியமான விஷயங்களும் காவேரி மருத்துவமனைகிட்ட இருக்கு. முன்னாடிலாம் காவேரி மருத்துவமனை எங்க இருக்குனு கேட்டால் கமல்ஹாசன் வீட்டுப் பக்கத்துல இருக்குனு சொல்வாங்க. இன்னைக்கு கமல்ஹாசன் வீடு எங்க இருக்குனு கேட்டால் காவேரி மருத்துவமனை பக்கத்துல இருக்குனு சொல்றாங்க.” என சிரித்தவர், ” இது சும்மா சொல்றதுதான். இதுக்கு கமல்ஹாசன் எதுவும் நினைச்சுக் வேண்டாம். மீடியா ஆட்கள் யாரும் ‘கமல்ஹாசனை கலாட்டா பண்றேன்’னு எழுதிடாதீங்க.” என்றார்.
மேலும், “இங்க பேச வேண்டாம்னு நினைச்சேன். ‘கொஞ்சம் மீடியா ஆட்கள் வருவாங்க. பேசுங்க’னு என்கிட்ட சொன்னாங்க. இங்க வந்து இத்தனை கேமராவை பார்த்ததும் எனக்கு பயம் வந்துடுச்சு. தேர்தல் சமயம் வேற இது. மூச்சு விடக்கூட பயமாக இருக்கு.” என கலகலப்பாக பேசினார்.
முழு வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.