சென்னை,
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் இன்று தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே. ) – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்த ஆட்டத்தில் புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் சி.எஸ்.கே. முதல் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு சென்னை ரசிகர்களிடம் காணப்படுகிறது. அதற்கு பதிலடி கொடுத்து டு பிளேஸிஸ் தலைமையில் ஆர்.சி.பி. வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு பெங்களூரு ரசிகர்களிடம் காணப்படுகிறது.
இந்நிலையில் பெங்களூரு பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலியை பவர் பிளே ஓவரில் அவுட்டாக்கினால் சி.எஸ்.கே. வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சென்னை அணியின் முன்னாள் வீரர் மேத்தியூ ஹெய்டன் கூறியுள்ளார். குறிப்பாக சவாலான சேப்பாக்கத்தில் விராட் கோலி தடுமாற்றமாக பேட்டிங் செய்து வருவதை சி.எஸ்.கே. பவுலர்கள் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
“இந்த வருடம் அனைத்து போட்டிகளிலும் விராட் கோலி கொண்டாடக் கூடியவராக இருப்பார். சேப்பாக்கத்தில் அவருடைய சராசரி 30 ஸ்ட்ரைக் ரேட் 111. அதனுடைய அர்த்தம் என்னவென்று தெரிகிறதா? விராட் கோலி போன்ற வீரரின் மகத்துவம் சேப்பாக்கம் மைதானத்தில் குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக சேப்பாக்கத்தில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக பேட்டிங் செய்வது சவாலானதாக இருக்கும்.
சற்று மெதுவாக இருக்கக்கூடிய அந்த மைதானத்தில் டென்னிஸ் பந்து போன்ற பவுன்ஸ் இருக்கும் என்பதால் உங்களுடைய ஷாட்டுகளை அடிப்பது கடினமாகும். இருப்பினும் அது போன்ற சூழ்நிலைகளில்தான் விராட் கோலி ஆபத்தானவர். ஒருவேளை அவர் 20 ஓவர்களும் பேட்டிங் செய்வதற்கு தயாராக வந்தால் போட்டியை வெல்ல முடியும்.
பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் 200 ரன்கள் அடிப்பது எளிதானது. ஆனால் சேப்பாக்கத்தில் அது அவசியமல்ல. பந்து மிகவும் கீழாக வரக்கூடிய இந்த மைதானத்தில் ஜடேஜா போன்றவர் ஸ்டம்ப் லைனில் துல்லியமாக வீசினால் 150 – 130 ரன்கள் அடிப்பது கூட கடினமாக இருக்கும். எனவே பவர் பிளே ஓவர்கள் முடிவதற்குள் விராட் கோலியை அவர்கள் அவுட் செய்ய வேண்டும். கடந்த 5 இன்னிங்ஸில் அவர்கள் அதை 3 முறை செய்துள்ளனர். தற்போது அவர்கள் நான்காவது முறையாக அதை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் சி.எஸ்.கே. எளிதில் வெற்றி பெறும் ” என்று கூறினார்.